கல்வித்துறையில் மட்டும் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.! கணினி ஆசிரியர்களுக்காக குரல் கொடுக்கும் டிடிவி தினகரன்.!



ttv dhinakaran request for computer teachers

பள்ளி கல்வித்துறை சமீபத்தில் வெளியிடப்பட்ட முதுகலை பட்டதாரி பணியிடங்கள் நிரப்புவது குறித்த அறிவிப்பில், மேல்நிலை கல்வி பாடங்களில் உள்ள முதுகலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் காலிபணியிடங்கள் நிரப்ப தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நியமிக்கலாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.

தமிழகம் முழுவதும் 2,774 முதுகலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி பணியிடங்கள் காலியாக உள்ளது எனவும், இதில் தமிழ், ஆங்கிலம், கணிதம் இயற்பியல், வேதியியல், உயரியல், தாவரவியல், விலங்கியல், பொருளியல், வரலாறு, புவியியல் மற்றும் வணிகவியல் பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என அறிவிப்பில் தொிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயத்தில் கணினி அறிவியல் பாடம் குறித்து எந்த அறிவிப்பு இடம்பெறவில்லை.


கணினி அறிவியல் காலிபணியிடங்கள் நியமிப்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லாததால் கணினி ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை வைத்துள்ளார். அவரது ட்விட்டர் பக்கத்தில், தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்புவதற்கான உத்தரவில் கணினி அறிவியல் பாடப்பிரிவை மட்டும் ஒதுக்கியது ஏன்?

கணினி பயன்பாடின்றி இன்றைக்கு எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அது தொடர்பான பாடம் கற்பிக்கப்படவில்லையென்றால் பரவாயில்லையா? கல்வித்துறையில் மட்டும் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதைப் போல குழப்ப ரேகைகள் தொடர்வது ஏன்? இந்தத் தவறு சரிசெய்யப்பட்டு, காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களும் தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்பப்படுமா? என குறிப்பிட்டுள்ளார்.