வேலை வாய்ப்பின்றி தவிக்கும் இளைஞர்களே... உதவித்தொகை பெற விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க.!



Unemployed people can apply for the scholarship

தமிழக அரசு 2006-ம் ஆண்டு முதல் வேலைவாய்ப்பு இன்றி தவிக்கும் இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டத்தின் கீழ் பயன் அடைய விரும்புவோர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து முறையாக பதிவை புதுப்பிக்க வேண்டும். 

தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் உயிர்ப்பதிவேட்டில் காத்திருக்கும் இளைஞர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 

முறையாக பள்ளியில் படித்து 9-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 10-ம் வகுப்பில் தோல்வியுற்றவர்களுக்கு மாதம் ரூ.200-ம், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300-ம், 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600-ம் உதவித்தொகை கொடுக்கப்பட்டு வருகின்றது. 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தை சார்ந்தவராயின் 45 வயதிற்கு குறைவாக இருப்பவர்களும், இதர வகுப்பினராயின் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும். தொடர்ந்து பதிவினை புதுப்பித்து இருக்க வேண்டும்.

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு பள்ளி இறுதி வகுப்புவரை படித்தவர்களுக்கு மாதம் 600 ரூபாயும், 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 750 ரூபாயும், பட்டதாரிகளுக்கு மாதம் 1,000 ரூபாயும் உதவி தொகையாக கொடுக்கப்படுகின்றது. மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். 

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பெயர் பதிவு செய்து காத்திருப்பவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த உதவித்தொகை பெறுவதற்கு மேற்காணும் தகுதிகள் உள்ளவர்கள் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அனைத்துக் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். 

விண்ணப்பங்கள் அனைத்து வேலை நாட்களிலும் வழங்கப்படும். மேலும் உதவித்தொகை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது எனவும் உதவித்தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு பரிந்துரைத்தலுக்கு எவ்வித தடையும் ஏற்படாது எனவும் கூறியுள்ளார்.