பிரதமர் பதவிக்கு ஆபத்து.. பாகிஸ்தானில் அரசியல் குழப்பம்.. பதவியை இழக்கிறாரா இம்ரான் கான்?..!



Pakistan Politics Issue Prime Minister Imran Khan Face off Difficulties

உள்நாட்டில் நடக்கும் பிரச்சனை மற்றும் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் ஆதரவு என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான் கானின் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், பாகிஸ்தான் அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மேலும், இம்ரான் கானின் கட்சியை சேர்ந்த 24 தேசிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆளுங்கக்கட்சிக்கு எதிராக தங்களின் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். 

இதனால் இம்ரான் கானின் பதவிக்கு ஆபத்து வந்துள்ள நிலையில், "என்ன ஆனாலும் பதவியில் இருந்து விலகமாட்டேன். சண்டையில்லாமல் சரணடைய மாட்டேன். மோசடி மனிதர்களின் அழுத்தத்திற்கு நான் ஏன் பயம் கொள்ள வேண்டும்?" என்று அவர் தெரிவித்துள்ளார்.  இம்ரானின் ஆட்சி பெரும்பான்மைக்கும் சிக்கல் வந்துள்ள நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மைக்கு குறைந்தது 172 உறுப்பினர்கள் வேண்டும். எதிர்க்கட்சிகள் தற்போது 163 உறுப்பினர்களை கொண்டுள்ளன. 

எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக விசாரணை செய்ய பாகிஸ்தான் நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை கூடும் நிலையில், பாகிஸ்தானின் அரசியலமைப்பு மற்றும் பொருளாதாரம், நிர்வாகத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளன. பாகிஸ்தானில் பலம்வாய்ந்த அமைப்பாக இருக்கும் இராணுவத்துடன் பிரதமர் இம்ரான் கானின் உறவு முறிந்துள்ளதாகவும் கூறப்படும் நிலையில், இராணுவம் நாங்கள் அரசியல் விவகாரத்தில் தலையிடப்போவதில்லை என்று தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Pakistan

தனது பதவியை பாதுகாக்க ஞாயிற்றுக்கிழமை மக்கள் பேரணி நடத்தவும் இம்ரான் கான் திட்டமிட்டுள்ளார். இதனால் பாகிஸ்தான் அரசியலில் அடுத்தகட்டமாக என்ன நகர்வு ஏற்படப்போகிறது என்ற ஐயமும் இருந்துள்ளது. ஏற்கனவே அங்கு தலிபான் ஆதரவு பெற்ற தெக்ரிக்-இ-தலிபான் பயங்கரவாதிகள் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக ஆயுதமேந்தி போராடியும் வருகின்றனர். இந்த நிலையில், பிரதமரின் பதவி நெருக்கடி பரபரப்பை கூட்டியுள்ளது. 

பாகிஸ்தான் நாட்டினை பொறுத்த வரையில் எந்த பிரதமரும் தனது பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்திடாத நிலையில், இம்ரான் கானின் பதவியும் கேள்விக்குறியாகியுள்ளது. தீவிரவாத ஒழிப்பு என்ற பெயரில் அமெரிக்காவிடம் நிதிவாங்கி வந்த பாகிஸ்தான், தீவிரவாதத்தை ஒழிக்காத காரணத்தால் அன்றைய அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் நிதியுதவியை நிறுத்திக்கொண்டார். அன்று தொடங்கிய பிரச்சனை ஒவ்வொன்றாக அதிகரித்து பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.  

தற்போது, எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் காரணமாக பிரதமர் பதவிக்கும் ஆப்பு வந்துள்ளதால் ஆட்சி கலையுமா? அல்லது இராணுவம் ஆட்சியை கைப்பற்றுமா? தெக்ரிக்-இ-தலிபான் நாட்டை பிரித்து தனியே எடுத்து செல்லுமா? என்ற பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.