ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தக்காளியின் விலை: அதிர்ச்சியில் உறைந்த இல்லத்தரசிகள்..!



Tomato prices skyrocket: Housewives in shock

கோயம்பேடு மார்க்கெட்டில் இயங்கிவரும் காய்கறி சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்காக வந்தபோதிலும் பெருமளவு காய்கறி வரத்து கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களையே அதிகளவில் சார்ந்துள்ளது. இதன் காரணமாக அந்த மாநிலங்களில் மழை, வெள்ள பாதிப்புகள் ஏற்படும்போது, அதன் எதிரொலியாக  காய்கறி வரத்து குறையும்.

தற்போது தக்காளி வரத்து குறைந்துள்ளதால் அதன் விலையில் இந்த பாதிப்பு எதிரொலித்துள்ளது. இதனை தொடர்ந்து தக்காளியின் விலை 'கிடுகிடு' வென உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் தக்காளி வியாபாரிகள் சங்க தலைவர் எம்.தியாகராஜன் கூறியதாவது:-

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினந்தோறும் 65 லாரிகள் வரை தக்காளி இறக்குமதி செய்யப்படுவது வழக்கம். ஆனால் தற்போது அண்டை மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக தக்காளி வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் 40 முதல் 45 லாரிகள் வரை மட்டுமே தக்காளிகள் வருகின்றன.

இதன் காரணமாக, ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி தற்போது ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. இப்போதுள்ள சூழலில் தக்காளியை போட்டி போட்டுக்கொண்டு வாங்கி கோயம்பேட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வருகிறோம். அண்டை மாநிலங்களில் இதற்கு மேலும் மழை நீடிக்கும் பட்சத்தில் தக்காளி விலை இன்னும் உயர வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.