அட.. இந்தியை விடுங்க! இதுதான் நமது தேசிய மொழி! புது சர்ச்சையை கிளப்பிய நடிகை கங்கனா!!



Actress kangana talk about national language

கடந்த சில காலங்களாகவே இந்திய தேசிய மொழி ஹிந்தி என்பதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலவிதமான கருத்துக்கள் பரவி வருகிறது. மேலும் பிரபலங்கள் கூட சர்ச்சையை கிளப்பும் வகையில் பல கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அண்மையில் கேஜிஎஃப் 2 வெற்றி குறித்து பேசிய கன்னட நடிகர் சுதீப், இந்தி இனி தேசிய மொழி இல்லை. பாலிவுட்டிலும் பான் இந்தியா திரைப்படங்களை தயாரிக்கிறார்கள் என கூறியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து பாலிவுட் நடிகரான அஜய் தேவ்கன், இந்தி தேசிய மொழி இல்லை என்றால் எதற்காக உங்கள் மொழி படங்களை இந்தியில் டப்பிங் செய்கிறீர்கள்? ஹிந்தி தான் எப்பொழுதும் இந்திய தேசிய மொழி என பதில் அளித்திருந்தார். இவ்வாறு பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக்க வேண்டும் என கூறியுள்ளார். 

நடிகை கங்கனா ரனாவத் இன்று தனது “தாகத்” படத்தின் டிரைலரை வெளியிட்டார். அப்பொழுது பேசிய அவர், “நமது அரசியலமைப்புச் சட்டத்தின்படி இந்தி தேசிய மொழி தான். ஆகவே பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் இந்தி மொழி நமது தேசிய மொழி என கூறியுள்ளார். அதில் எந்த தவறும் இல்லை. இந்தியா மொழி வாரியாக வேற்றுமை கொண்டுள்ளது. எல்லோரையும் ஒன்றாக இணைக்க பொதுவான மொழி தேவை. இந்தி தேசிய மொழியாக்கப்பட்டது. 

ஆனால்  இந்தியை விட தமிழ் பழமையானது. ஆனால் சமஸ்கிருதம் அதனை காட்டிலும் தொன்மையானது. மொழிகள் அனைத்தும் சமஸ்கிருத மொழியிலிருந்து வந்திருக்கலாம். பின் ஏன் நமது நாட்டின் தேசிய மொழியாக சமஸ்கிருதம் இருக்க கூடாது? தேசிய மொழி எது என என்னைக் கேட்டால், அது சமஸ்கிருத மொழியாக இருக்கலாம் என நினைக்கிறேன் எனக் கூறியுள்ளார்.