கொரோனா வைரஸ் செயற்கையாக உருவாக்கப்பட்டதா.? கொரோனா எங்கிருந்து பரவியது.? ஆய்வில் கண்டுபிடிப்பு



corona spread from the Wuhan market

சீனாவின் வூகான் நகரில் உள்ள மார்க்கெட்டில் இருந்து தான் கொரோனா பரவியது என்று உலக சுகாதார அமைப்பு தெளிவுப்படுத்தியுள்ளது.

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதத்தில் கொரோனா வைரஸ் உருவானது. பின்னர், உலகம் முழுவதும் பரவியது. அதன் தாக்கம் இன்றளவும் நீடித்து வருகிறது. சீனாவில் உகான் நகரில் உள்ள ஹுனன் மார்க்கெட்டில் இருந்துதான் கொரோனா உருவானதாக கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் சீன அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இந்தநிலையில், கொரோனா உருவானது குறித்து கடந்த ஆண்டு உலக சுகாதார அமைப்பு ஆய்வு நடத்தியது. அதில், ஹுனன் மார்க்கெட்டில் வவ்வாலில் இருந்து மற்றொரு விலங்கு வழியாக மனிதர்களுக்கு கொரோனா பரவியதாக கண்டறியப்பட்டது. சீனாவில் உள்ள வைரஸ் ஆய்வுக்கூடத்தில் கொரோனா வைரசை செயற்கையாக சீனா உருவாக்கியதாகவும் ஒரு கருத்து உலவுகிறது.

இந்தநிலையில், விஞ்ஞானிகள் சிலர் கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்று 3 ஆய்வுகளை நடத்தினர். அவற்றின் முடிவுகளை வெளியிட்டுள்ளனர். அவற்றில் 2 ஆய்வுகளில், உகான் நகரில் உயிருடன் பாலூட்டி ரக விலங்குகளை விற்கும் ஹுனன் மொத்த மார்க்கெட்டில் இருந்துதான் கொரோனா பரவியதாக அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மரபணு பகுப்பாய்வு மூலம் இதை கண்டறிந்து, அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளனர். ஆனால், சீன ஆய்வுக்கூடத்தில் செயற்கையாக கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டதாக கூறப்படுவதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.