அரிய வகை தோல் நோயிக்கு உயரிய சிகிச்சை: நோயாளியின் உயிரை காப்பாற்றி கோவை அரசு மருத்துவர்கள் சாதனை..!



Coimbatore Government Hospital records the rare treatment of a person suffering from a rare skin disease

அரிய வகை தோல் நோயால் பாதிக்கப்பட்ட நபரை உரிய சிகிச்சை அளித்து காப்பாற்றி கோவை அரசு மருத்துவமனை சாதனை புரிந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள எரிசனம்பட்டியை சேர்ந்தவர் முருகவேல் (35). கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு தோல் முழுவதும், உரிந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் முருகவேல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தோல் நோய் பிரிவில், அனுமதிக்கப்பட்ட முருகவேலுக்கு, மருத்துவர்கள் தீவிர கண்காணிப்புடன் தொடர் சிகிச்சை அளித்தனர். இந்த நோயால் 80 சதவீதம் வரை இறப்பு நேரிட வாய்ப்பு இருந்த போதிலும், நவீன சிகிச்சை வாயிலாக, நோயாளியை காப்பாற்றி சாதனை படைத்துள்ளனர்.

முருகவேலுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து, கோவை அரசு மருத்துவமனையின் டீன் நிர்மலா கூறியதாவது:-‘டாக்சிக் எபிடெர்மெல் நெக்ரோலைசிஸ்’ எனும் இந்த நோய் மாத்திரைகளால் ஏற்படும் ஒவ்வாமை மற்றும் கிருமி தொற்றினால் ஏற்படும். உடலில் சிவப்பு நிறத்தில் கொப்பளங்கள் தோன்றி, பின்னர் தோல் உரியத்தொடங்கும். ஆசனவாயில் புண் ஏற்படும். தோல் முழுவதும் உரிந்து, பிற கிருமிகள் தொற்று ஏற்பட்டு உள் உறுப்புகள் செயல் இழக்கும்.

இந்த நோயின் தாக்கத்தால், 50 முதல் 80 சதவீதம் வரை இறப்பு நேரிடும் அபாயம் உள்ளது. ஆனாலும், இவருக்கு முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து, சிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் வீடு திரும்பினார். தனியார் மருத்துவமனையில், இந்த சிகிச்சைக்கு ரூ.8 லட்சங்கள் முதல் 10 லட்ச ரூபாய் வரை செலவாகும். கோவை அரசு மருத்துவமனையில் இலவசமாக இந்த சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.