மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பீகாரில் ஏற்பட்ட வன்முறையால் 144 தடை உத்தரவு... 80 பேர் கைது... ஒருவர் பலி..!!
நேற்றிரவு பீகாரில் ஏற்பட்ட வன்முறையில் ஒருவர் பலியானார். இதைத் தொடர்ந்து 80 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ராமநவமி கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் கடந்த 30-ஆம் தேதி நடைபெற்றது. அதன் படி பீகாரிலும் பல்வேறு நகரங்களில் சாமி சிலைகள் ஊர்வலம், சிலை கரைப்பு போன்றவை நடந்தன. இந்த நிகழ்வை முன்னிட்டு, நாலந்தா மற்றும் சசராம் ஆகிய மாவட்டங்களில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
இதனால், வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. இதில் எட்டு பேர் காயமடைந்தனர். மேலும் மூன்று பேருக்கு துப்பாக்கி குண்டு காயங்கள் ஏற்பட்டன. இதனை தொடர்ந்து கூடுதல் காவல்துறையினர், நாலந்தா மாவட்டத்தின் பீஹார்ஷெரீப் மற்றும் ரோத்தாஸ் மாவட்டத்தின் சசராம் நகர பகுதியில் குவிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து பீகார் காவல்துறையினர் விசாரணை நடத்தி இரண்டு எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர். 27 பேர் நாலந்தாவிலும், 18 பேர் ரோத்தாசிலும், கைது செய்யப்பட்டு உள்ளனர் என்று காவல்துறையினர் டுவிட்டரில் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மூத்த அதிகாரிகள் வன்முறை நிகழ்ந்த பகுதிகளில் முகாமிட்டு நிலைமையை பார்வையிட்டு வருகின்றனர்.
மேலும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து, பொய்யான மற்றும் தூண்டி விடக்கூடிய செய்திகள் பரவி விடாமல் தடுக்கும் வகையில் சமூக ஊடகங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும் என்று காவல்துறையினர் டுவிட்டர் மூலம் கேட்டு கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், ரோத்தாஸ் மாவட்டத்தின் சசராம் நகரில் பீகார் அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை தொடர்ந்து, பீகாரில் மீண்டும் நேற்றிரவு வன்முறை ஏற்பட்டுள்ளது. இந்த வன்முறை சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காவல்துறையினர் அவரது உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து நாலந்தா மாவட்டத்தின் பீகார்ஷெரீப் நகரின் காவல் சூப்பிரெண்டு அசோக் மிஷ்ரா பேசும் போது, வன்முறை நடைபெற்றதை தொடர்ந்து காவல்துறையினர் நேற்றிரவு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் எட்டு எப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. கூடுதல் காவலர்கள் குவிக்கப்பட உள்ளனர் என்று கூறியுள்ளார்.
இதேபோல், நாலந்தா மாவட்ட மாஜிஸ்திரேட் ஷஷாங்க் சுபாங்கர் கூறும்போது, மேலும் பீகார்ஷெரீப் பகுதியில் மூன்று இடங்களில் நேற்றிரவு புதிதாக வன்முறை நிகழ்ந்துள்ளது. தற்போது நிலைமை சீராக உள்ளது. இதை தொடர்ந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. சமூக விரோதிகள் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.