கொரோனா சமயத்தில் மேலும் ஒரு சோகமான செய்தி! நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பரிதாப பலி!



20 people died in landslide

அசாம் மாநிலத்தில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அசாம் மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அசாமில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுமார் 3.72 லட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ள நிலையில், மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் மேலும் துயரத்தில் உள்ளனர்.

அசாமில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக தெற்கு அசாமில் உள்ள பராக் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 20 பேர் நிலச்சரிவில் சிக்கி  பரிதாபமாக பலியாகி உள்ளனர்.  

அசாமில் ஏற்பட்ட நிலச்சரிவுகளைத் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தவும், உறவினர்களை இழந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவும் அசாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். கொரோனாவால் மக்கள் சிரமப்பட்டு வரும் நிலையில் அங்கு நடந்த உயிரிழப்பு மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.