ஆட்டோவின் மதிப்பே 25 ஆயிரம் தான்; ஆனால் அபராதம் 47 ஆயிரம்! ஆட்டோ டிரைவர் குமுறல்
மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி ஒரிசாவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு 47,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஒரிசா மாநிலம் புவனேஷ்வரைச் சேர்ந்தவர் ஹரிபந்து கஹான். இவர் சமீபத்தில் வேறு ஒருவரிடம் 25 ஆயிரம் ரூபாய்க்கு ஆட்டோ ஒன்றை வாங்கி வாடகைக்கு ஓட்டி வருகிறார்.
ஹரிபந்து நேற்று மது அருந்தி விட்டு ஆட்டோவை ஓட்டி வந்துள்ளார். அப்போது புவனேஷ்வர் நகரில் உள்ள ஆச்சார்யா விஹார் மற்றும் ஜெயதேவ் விஹார் பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது குடிபோதையில் ஆட்டோவை ஓட்டி வந்த ஹரிபந்துவை போலீசார் தடுத்து நிறுத்தி ஆவணங்களை கேட்டுள்ளனர். ஆனால் அவரிடம் பல ஆவணங்கள் சரியாக இல்லை. இதனால், போக்குவரத்து போலீஸார் ஹரிபந்துவுக்கு பல்வேறு பிரிவுகளில் ரூ.47500 அபராதம் விதித்துள்ளனர்.
பொதுவான குற்றத்துக்கு ரூ.500, வாகன உரிமைக்கு தொடர்பில்லாதவர் வாகனத்தை இயக்கியமைக்காக ரூ.5 ஆயிரம், ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனத்தை இயக்கியதால் ரூ.5 ஆயிரம், மதுபோதையில் வாகனத்தை இயக்கியதால் ரூ.10ஆயிரம், காற்றுமாசு ஏற்படுத்தியமைக்காக ரூ.10 ஆயிரம், பதிவுச்சான்று இல்லாததால் ரூ.5 ஆயிரம், பெர்மிட் இல்லாமல் ஓட்டியதற்காக ரூ.10 ஆயிரம், காப்பீடு இன்றி வாகனம் ஓட்டியதற்காக ரூ.2 ஆயிரம் என ரூ.47, 500 அபராதமாக விதித்துள்ளனர்.
புவனேஷ்வரில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்தில் அபராதத்தை செலுத்த போக்குவரத்து போலீஸார் கூறியுள்ளார்கள். வெறும் 25 ஆயிரம் மதிப்புள்ள ஆட்டோவை ஓட்டியதற்கு 47500 ரூபாய் அபராதம் செலுத்த கூறினால் என்ன செய்வது என்று புலம்புகிறார் ஹரிபந்து.