அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை.! 5 பேர் உயிரிழப்பு.! ஆந்திராவில் நடந்த துயரம்.!
இந்தியாவில் ஆரம்பத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா வைரஸ் சமீப காலமாக குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் அதிகப்படியானோர் கொரோனாவால் பாதிப்படைந்து வருவதால் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதாக தகவல் வெளியானது.
பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், இந்த பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு கடந்த சில நாட்களாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில், ஆந்திராவில் மகாராஜா அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திராவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், விஜயநகரம் மாவட்டம் மகாராஜா அரசு மருத்துவமனையில் 290 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அந்த மருத்துவமனையில், நோயாளிகளுக்கு வழங்கும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் 25 பேர் பாதிப்படைந்துள்ளனர். அவர்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், விசாகபட்டினத்தில் இருந்து ஆக்சிஜன் வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.