சந்திரயானை சொந்தம் கொண்டாடும் சூரத் நபர்: களத்தில் இறங்கிய போலீசார்..!!
சந்திரயான்-3 லேண்டரை தான் வடிவமைத்ததாக சூரத் நகரை சேர்ந்த ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சந்திரயான்-3 விண்கலம் நிலவினை ஆய்வு செய்ய கடந்த மாதம் 14 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில் கடந்த 23ஆம் தேதி மாலை திட்டமிட்டபடி 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம் நிலவில் கால் பதித்த 4வது நாடாகவும், தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடாகவும் இந்தியா சாதனை புரிந்தது.
இதனை தொடர்ந்து விக்ரம் லேண்டரில் இருந்து இறங்கிய பிரக்கியான் ரோவர் ஊர்தி நிலவில் தனது ஆய்வை தொடங்கியது. இந்த மிகப்பெரிய சாதனையை புரிந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு உலக அளவில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. முன்னதாக ரஷ்யா நிலவின் தென் துருவத்தை நோக்கி அனுப்பிய லூனா-25 விண்கலம் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், குஜராத் மாநிலம் சூரத் நகர் பகுதியை சேர்ந்த மிதுல் திரிவேதி என்பவர் லேண்டரை நான்தான் வடிவமைத்தேன் என்று அதிரடியாக கூறியுள்ளார். மேலும் அவர், தான் ஆராய்ச்சி பட்டம் பெற்றிருப்பதாகவும், இஸ்ரோ மற்றும் நாசாவில் பணிபுரிந்ததாகவும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், மிதுல் திரிவேதி இஸ்ரோ அல்லது நாசாவில் பணிபுரிந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. மேலும் அவர் ஆராய்ச்சி படிப்பு எதையும் படிக்கவும் இல்லை, அவர் பி.காம் வரை படித்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் கூறுவது பொய் என்பது உறுதியானால் அவர் மீது நடவடிக்கை எடுப்போம் என்று கூறியுள்ளனர்.