அமேசானில் போன் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி! டெலிவரி பாய் செய்த மோசமான காரியம்.
டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர் அமேசான் ஆன்லைன் நிறுவனத்தில் தொலைபேசி ஒன்றை ஆர்டர் செய்திருந்தநிலையில் டெலிவரி பாய் செய்துள்ள காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர் பிரபல ஆன்லைன் இணையதளமான அமேசானில் தொலைபேசி ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். இந்நிலையில் தொலைபேசி ஆர்டர் செய்த வாடிக்கையாளரை தொடர்புகொண்ட அமேசான் டெலிவரி பாய் ஒருவர், உங்கள் ஆர்டர் கேன்சல் ஆகிவிட்டதாகவும், உங்கள் பணம் விரைவில் உங்கள் வங்கி கணக்கிற்கு வந்துவிடும் என கூறியுள்ளார்.
இதனை அந்த வாடிக்கையாளரும் நம்பியநிலையில் பணம் வங்கி கணக்கிற்கு வராததால் தனது பணம் குறித்து அமேசான் வாடிக்கையாளர் மையத்திடம் தொடர்புகொண்டு கேட்டுள்ளார். அவர்கள் ஏற்கனவே உங்கள் தொலைபேசி டெலிவரி செய்யப்பட்டுவிட்டதாக கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த வாடிக்கையாளர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் இந்த சம்பவம் குறித்து நடத்திய விசாரணையில், டெல்லி கீர்த்தி நகரை சேர்ந்த மனோஜ் என்ற டெலிவரி செய்யும் நபரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், வாடிக்கையாளரின் தொலைபேசியை வேறொருவரிடம் விற்பனை செய்துவிட்டு, உங்கள் ஆர்டர் கேன்சல் ஆகிவிட்டதாக வாடிக்கையாளரிடம் டெலிவரி பாய் கூறியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.