அதிகாரிகள் போல் நடித்து 68 லட்சத்தை ஆட்டையை போட்ட பலே ஆசாமிகள்!: போலீசின் பிடியில் இருந்து தப்புவார்களா?!



Bale assailants who stole 68 lakhs by pretending to be officials

நகை கடை ஊழியர்களை ஏமாற்றி, வருமான வரி அதிகாரிகள் போல நடித்து ரூ.68 லட்சத்தை கொள்ளையடித்து சென்றவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (42). இவர் நகை கடை நடத்தி வருகிறார். நகை கடையில் சுபானி (25), மற்றும் அலிகான் (25) என இரண்டு பேர் வேலை செய்து வருகின்றனர். நகை கடை உரிமையாளர் விஸ்வநாதன் நேற்று முன்தினம் இரவு இவர்கள் இருவரிடமும், சென்னை சவுகார்பேட்டையில் நகை பட்டறையில் ஆர்டர் கொடுத்த நகைகளை வாங்கி வருமாறு கூறி 68 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து அனுப்பினார். 

இருவரும் பேருந்தில் பணத்துடன் சென்னை மாதவரத்தில் உள்ள ஆந்திர மாநில பேருந்து நிலையத்தில் வந்து இறங்கினர். கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகரில் அலிகானின் உறவினர்கள் இருப்பதால் அவர்களை பார்த்துவிட்டு சவுகார்பேட்டைக்கு செல்லலாம் என கூறி இருவரும் ஆட்டோ மூலம் கொடுங்கையூர் மீனாம்பாள் சாலை வழியாக சென்று கொண்டிருந்த போது ஒரு காரில் வந்த நான்கு பேர், ஆட்டோவை வழிமறித்து நிறுத்தி உள்ளனர். 

ஆட்டோவை நிறுத்திய அவர்கள் அலிகானிடம், நாங்கள் வருமான வரி அதிகாரிகள் என்று சொல்லி அவர்களிடம் இருந்த ரூ.68 லட்சத்தை வாங்கி கொண்டு, அலிகானை காரில் ஏற்றி சென்றுள்ளனர். சிறிது தூரம் சென்றவுடன் அலிகானை காரில் இருந்து கீழே தள்ளி விட்டு பணத்துடன் சென்றுள்ளனர். பின்னர் தான் வந்தவர்கள் வருமான வரி அதிகாரிகள் போல் நகையை கொள்ளையடித்து சென்றது அலிகானுக்கு தெரியவந்தது. 

அதன் பிறகு இதுகுறித்து அவர், நகைக்கடை உரிமையாளர் விஸ்வநாதனிடம் தகவல் அளித்தார். விஸ்வநாதன் உடனடியாக, குண்டூரில் இருந்து சென்னை வந்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.