மாணவர்களின் நலனே முக்கியம்.! 12-ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து.! பிரதமர் மோடி அறிவிப்பு.!!



cbse 12'th public exam cancelled

இந்தியாவில் கொரோனா பரவலின் 2வது அலை தீவிரமாகப் பரவியதையடுத்து 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வை சிபிஎஸ்இ நிர்வாகம் ஒத்திவைத்தது. ஜூன் 1-ம் தேதி தேர்வு குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதுபோலவே பல மாநிலங்களிலும் 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.

இதனையடுத்து 12-ம் வகுப்புத் தேர்வை நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் 12-ம் வகுப்புத் தேர்வுகளை நடத்துவதா அல்லது ரத்து செய்வதா என்பது குறித்து அடுத்த 2 நாட்களில் மத்திய அரசு உரிய முடிவு எடுக்கும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல மத்திய அமைச்சர்கள், பிரதமரின் முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித் துறைகளின் செயலாளர்கள் மற்றும் பிற உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

இந்நிலையில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி, நாடு முழுவதும் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் உரிய முறைப்படி அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.