#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தீவிர கண்காணிப்பில் கடலோர பகுதிகள்: கடலோர காவல் படையினர் 24 மணிநேர ரோந்து..!
இந்தியாவின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் உட்பட ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதிகளில் 8 கப்பல்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
ராமேஸ்வரம், வருகின்ற ஆகஸ்ட் 15-ஆம் தேதி நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. எனவே சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள முக்கிய இடங்களில் குறிப்பாக கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் மேலும் கூடுதலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மண்டபத்தில் இருக்கும் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான நான்கு ஹோவர்கிராஃப்ட் கப்பலும், இரண்டு அதிவேக கப்பலும் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதிகளில் இரவு பகலாக ரோந்து பணியில் உள்ளன.
அதுமட்டுமின்றி சென்னையில் இருக்கும் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான அதிநவீன கப்பல் ஒன்றும், இந்திய கடற்படைக்கு சொந்தமான அதிநவீன கப்பல் ஒன்றும் ராமேஸ்வரம், தனுஷ்கோடி முதல் தொண்டி வரையில் உள்ள இந்திய எல்லைக்கு உட்பட்ட ஆழ் கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. மேலும் உச்சிப்புளி பருந்து கடற்படை விமான தளத்திலிருந்து டார்னியர் விமானம் மற்றும் ஆள் இல்லாத விமானமும், அதிநவீன ஹெலிகாப்டரும் ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன.
மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்திக்கு உட்பட்ட இந்திய கடல் பகுதியில் சந்தேகப்படும்படியான படகுகள் ஏதேனும் வருகின்றதா என இந்திய கடற்படையினர் ஹெலிகாப்டரில் தாழ்வாக பறந்தபடி தீவிர கண்கானிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர், கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களிடம் கடலில் சந்தேக படும்படியான நபர்களையோ, படகுகளையோ, கண்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மீனவர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது.