எச்சரிக்கை.. "மின்கட்டணம் பாக்கி உள்ளது" - குறுந்தகவல் அனுப்பி 50,000 வரை மோசடி..! தொடரும் சைபர் குற்றங்கள்..!!
சைபர் குற்றங்கள் இன்று பலவழிகளில் நடைபெற்று வருகிறது. அதனை தடுக்க காவல்துறையினர் பல நடவடிக்கை எடுத்தாலும், பலனில்லை. மக்களிடமிருந்து ஏதோ ஒருபெயரில் இன்னும் சோதனைமுறையில், இணையவழியில் திருட்டு நடைபெறுவது தொடர்கதையாகியுள்ளது.
இந்த நிலையில், டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் மக்களுக்கு தங்களின் மின்கட்டணம் பாக்கியுள்ளதாகவும், அதனை செலுத்த வேண்டும் என்று குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. மின்சார கட்டணத்தை செலுத்த வாடிக்கையாளர் சேவைமைய எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும் என்று ஒரு அழைப்பு எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணை தொடர்புகொண்டு கேட்கையில், எலக்ட்ரிசிட்டி ஆப் என்ற செயலியை டவுன்லோட் செய்து அதில் செலுத்துமாறு கூறவே, கட்டணம் செலுத்தாத பலரும் அதனை நம்பி அந்தசெயலியை டவுன்லோடு செய்கையில், அவர்களின் வங்கி கணக்கில் இருந்து தலா 50,000 வரை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் மின்அலுவலகத்தை தொடர்புகொண்டு கேட்டபோது அவர்கள் எந்தவிதமான தகவலும் அனுப்பவில்லை என்று கூறியுள்ளனர். எனவே பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர், மோசடியில் ஈடுபட்ட தினேஷ் சந்த் என்ற வாலிபரை கைது செய்துள்ளனர்.