மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்திய இராணுவத்தின் இமயம்.. முப்படைகளின் முதல் தலைமை தளபதி.. யார் இந்த ஜெனரல் பிபின் ராவத்?..!
40 வருடங்கள் இந்திய இராணுவத்தில் இந்திய மக்களுக்காகவும், இராணுவத்தின் வளர்ச்சிக்காகவும் பணியாற்றிய இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், விமான விபத்தில் உயிரிழந்தார். அவர் குறித்த தகவலை தெரிந்துகொள்ளலாம்.
பிபின் லக்ஷ்மன் சிங் ராவத் என்ற பிபின் ராவத், கடந்த மார்ச் 16, 1958 ஆம் வருடம் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பவூரி நகரில் பிறந்தார். இவரது தந்தை Lt. ஜெனரல் லக்ஷ்மன் சிங் ராவத் ஆவார். பிபின் ராவத் தற்போது இந்திய முப்படைகளின் தலைமை தளபதியாக பணியாற்றி வந்தார். இந்திய இராணுவத்தின் 26 ஆவது தளபதி, நான்கு நட்சத்திர ஜெனரல், முப்படைகளுக்கான முதல் தலைமை தளபதி, PVSM, UYSM, AVSM, YSM, SM, VSM, ADC போன்ற பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரர் என்பதும் குறிப்பிடதக்கது.
ஜெனரல் பிபின் ராவத்தின் குடும்பம் இராணுவ பாரம்பரியம் கொண்ட குடும்பம் ஆகும். காலம் காலமாக அவர்களின் குடும்பம் இராணுவத்தில் தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளது. பிபின் ராவத்தின் தாய், உத்தரகாஷி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கிஷன் சிங் பர்மரின் மகள் ஆவார். தனது இளமை கல்வியை டேராடூனில் உள்ள கேம்பிரியன் ஹால் பள்ளி, சிம்லாவில் உள்ள செயின்ட் எட்வேர்ட் பள்ளியில் பயின்ற பிபின், தேசிய பாதுகாப்பு அகாடமியில் சேர்த்து பயின்று, 'Sword of Honour' விருதையும் பெற்றுள்ளார்.
பின்னர், ஊட்டியில் உள்ள வெலிங்ஸ்டன் இந்திய இராணுவ பயிற்சி கல்லூரியில் ஆர்மி கமாண்ட் மற்றும் உயர்கட்டளை படிப்பு பட்டமும் பெற்றுள்ளார். பாதுகாப்பு படிப்பில் எம்.பி பட்டம் பெற்ற பிபின், மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் மேலாண்மை மற்றும் டிப்ளமோ கணினிப்படிப்பும் பயின்றுள்ளார். கடந்த 1978 ஆம் வருடம் டிசம்பர் 11 ஆம் தேதி கோர்கா ரைபிள் 5 ஆவது பட்டாலியனில், தந்தையின் அதே பிரிவில் இராணுவத்தில் பணியாற்ற தொடங்கினார். இராணுவத்தில் உயர்மட்ட போரில் அதிக அனுபவம் பெற்ற பிபின், கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கையில் 10 வருடம் பணியாற்றியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள உறியில், இராணுவ கம்பெனிக்கு மேஜராக நியமிக்கப்பட்ட பிபின், பின்னாளில் கர்னலாக உயர்ந்து இந்திய - பாகிஸ்தான் எல்லை கட்டுப்பட்டு பகுதியில், கிழக்குத்துறை பிரிவில் 5 ஆவது பட்டாலியனில் 11 கோர்கா ரைபிள் பிரிவுக்கு கட்டளையிட்டார். பின்னர், பிரிகேடியர் பதவிக்கு உயர்த்தப்பட்ட பிபின், சோபோரில் ராஷ்ட்ரிய ரைபிள் 5 பிரிவுக்கு தலைமை தாங்கினார். இந்திய - காங்கோ அரசின் கூட்டமைப்பில், காங்கோ குடியரசில் MONUSCO அத்தியாயம் 7 பிரிவில் பன்னாட்டு படைக்கு தலைமை தாங்கி, இரண்டு முறை படைத்தளபதியின் பாராட்டுகளையும் பெற்றார்.
அதனைத்தொடர்ந்து, மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற ராவத், 19 ஆவது காலாட்படை பிரிவின் உரி செக்டர் தளபதியாக பொறுப்பேற்றார். மேலும், Lt ஜெனரலாக புனேவில் இருந்து தெற்கு இராணுவத்தை வழிநடத்தினார். இராணுவ தளபதியாக பதவியுயர்வு பெற்ற பிபின் ராவத், கடந்த 1 ஜனவரி 2016 ஆம் வருடம் தெற்கு தளபதியாக ஜெனரல் ஆபிசர் காமாண்டிங் பதவியை பெற்றார். பின்னர், 1 செப் 2016 அன்று இராணுவ துணை தளபதியாகவும் பொறுப்பேற்றார்.
அதனைத்தொடர்ந்து, இராணுவ தலைமை தளபதியாக பதவிஉயர்வு பெற்ற பிபின் ராவத், 3 வருடங்கள் பணியாற்ற நிலையில், முப்படை உருவாக்கப்பட்டு முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக நியமனம் செய்யப்பட்டார். இவர் பணியாற்றிய காலங்களில் சீனாவுடன் எல்லை பிரச்சனை ஏற்பட்ட போது, பிபின் ராவத் தலைமையில் எல்லைக்கு படைகள் அனுப்பப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூன் 2015 ஆம் வருடம் மணிப்பூரில் UNLFW என்ற தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு இந்திய இராணுவம் எல்லைதாண்டிய தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தது. மேலும், பாராசூட் ரெஜிமென்ட் 21 ஆவது பட்டாலியன் பிரிவு, மியான்மரில் இருக்கும் NSCN K தளத்தை தாக்கி அழித்தன. இந்த படைகளுக்கு பிபின் ராவத்தே தலைமை தங்கியிருந்தார். இராணுவத்திலேயே வாழ்க்கையை தொடங்கி, இராணுவத்திலேயே வாழ்க்கையை முடித்துள்ள பிபின் ராவத், 18 பதக்கத்தை பெற்று தனது மார்பில் சுமந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய இராணுவத்தின் தரத்தை மென்மேலும் தொழில்நுட்ப ரீதியிலும், ஆயுதங்கள் ரீதியிலும் தொடர்ந்து உயர்த்த வேண்டும் என்று எப்போதும் கூறி வருபவர் பிபின் ராவத். இந்தியாவின் முப்படைகளின் தரத்தை உயர்த்த முதல் நபராக தேர்வு செய்யப்பட்ட பிபின் ராவத், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தது இந்தியாவிற்கே பெரும் வருத்தத்தை அளித்துள்ளது. அவரது ஆசையினை வரும் காலங்களில் அரசு நிறைவேற்றி, பாதுகாப்பு விஷயங்களில் இந்தியாவை முன்னோடியாக அழைத்து செல்ல வேண்டும். அதுவே அவருக்கு நமது அரசு செய்யும் மரியாதையாக இருக்கும்.
அவரது மரணத்தை இந்திய விமானப்படை தனது ட்விட்டர் பக்கத்தில் பெரும் வருத்தத்துடன் பகிர்ந்துள்ளது. மேலும், குன்னூர் விபத்தில் ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், விமானி வருண் சிங்குக்கு வெலிங்ஸ்டன் இராணுவ மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் நாளை டெல்லி கொண்டுசெல்லப்படவுள்ளது. ஊட்டி வெலிங்ஸ்டன் இராணுவ பயிற்சிக்கல்லூரியில் பயின்று வரும் இராணுவ வீரர்கள் மத்தியில் வீர உரையாற்ற வந்த பிபின் ராவத் உரையாற்றாமலேயே இவ்வுலகை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.
Indian Air Force announces the demise of CDS General Bipin Rawat along with 12 others in chopper crash pic.twitter.com/8Ebrz6OoQZ
— ANI (@ANI) December 8, 2021