புதிய உச்சத்தை தொட்ட மதுபான விற்பனை: ரூ. 624 கோடியை எட்டி புதிய சாதனை..!
கேரள மாநிலத்தில் பாரம்பரியமாக ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 30 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் ஓணம் திருவிழா அங்கு விமரிசையாக கொண்டாடப்பட்டது. கடந்த 8 ஆம் தேதி மிகுந்த உற்சாகத்துடன் கேரள மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடினர். அதற்கு முந்தைய நாள் 7 ஆம் தேதி கேரளாவில் மதுபான விற்பனை புதிய உச்சத்தை எட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த 7 ஆம் தேதியன்று ஒரே நாளில் ரூ.117 கோடிக்கு மது விற்பனை நடைபெற்று, புதிய சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளது. கேரளாவில் கடந்த ஆண்டு ஓணம் பண்டிகைக்கு முந்தைய நாள் ரூ.85 கோடிக்கு மது விற்பனை நடந்தது. கடந்த ஆண்டை விட ரூ.32 கோடி அதிகமாக நடப்பு ஆண்டில் மது விற்பனையாகி உள்ளது. கேரள மாநில மதுபான கழகமான பெப்கோ நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும், மதுபான கடைகளில் ரூ.115 கோடிக்கு வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த ஆண்டில் ஓணம் பண்டிகையை ஒட்டி ஒரு வாரத்தில் ரூ.529 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. நடப்பு ஆண்டில் ரூ.624 கோடிக்கு மது விற்பனை நடைபெற்று உள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.95 கோடி அதிகம் ஆகும்.