#BirdFlu: அடுத்தடுத்து உயிரிழந்த 100 கோழிகள்.. பறவைக்காய்ச்சல் அச்சத்தால் 25 ஆயிரம் கோழிகளை கொல்ல உத்தரவு.!
கோழிப்பண்ணையில் 100 கோழிகள் உயிரிழந்த நிலையில், பறவைக்காய்ச்சலின் அச்சம் காரணமாக சுற்றுவட்டாரத்தில் உள்ள பண்ணைகளில் வளர்ந்து வரும் கோழிகளை அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்ட, ஷகாபூர் வெஹ்லோலி கிராமத்தில் கோழிப்பண்ணை செயல்பட்டு வருகிறது. மேலும், ஷகாபூர் தாலுகா பகுதிகளில் பரவலாக கோழிப்பண்ணைகள் அதிகளவில் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், வெஹ்லோலி கிராமத்தில் செயல்பட்டு வரும் கோழிப்பண்ணையில், 100 கோழிகள் அடுத்தடுத்து உயிரிழந்தது. இந்த விஷயம் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரியவரவே, கால்நடைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.
அவர்கள், உயிரிழந்த கோழிகளின் மாதிரிகளை சேகரித்து புனேவில் இருக்கும் ஆய்வகத்திற்கு அனுப்பி இருக்கின்றனர். மேலும், அங்கு பறவைக்காய்ச்சல் அச்சம் எழுந்துள்ளதால், பாதிக்கப்பட்ட கோழிப்பண்ணையில் இருந்து 1 கி.மீ சுற்றளவில் உள்ள பிற பண்ணைகளில் இருக்கும் கோழிகளையும் அழிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் வரும் ஒன்று அல்லது 2 நாட்களில் சுமார் 25 ஆயிரம் கோழிகள் கொல்லப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நோய் பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கையை உடனடியாக எடுக்குமாறு மாவட்ட கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு தானே மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் ஜெ நர்வேகர் உத்தரவிட்டுள்ளார்.