அயோத்தி தீர்ப்பில் திருப்தியில்லை! சன்னி வக்பு வாரியம் விரைவில் சீராய்வு மனு!



not-sattisfied-in-judgement


அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் திருப்தியில்லை என சன்னி வக்ஃபு வாரியம் தெரிவித்துள்ளது.

அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்  தீர்ப்பை வாசித்தார்.

அதில், அயோத்தியில் காலியிடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை. பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன்பே அங்கிருந்த கட்டிடம் இஸ்லாமிய முறைப்படி கட்டப்படவில்லை. அலகாபாத் நீதிமன்றம் நிலத்தை மூன்றாக பிரித்து வழங்கியது தவறு என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

அயோத்தியில் 3மாதத்தில் ராமர் கோவில் கட்டும் அமைப்பை தயாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதற்கான அறக்கட்டளை உருவாக்கி நிலத்தில் ராமர் கோவில் கட்டும் பணிகள் தொடரலாம் என தெரிவித்தது.

மேலும் இஸ்லாமியர்களுக்கு, மசூதி அமைக்க 5ஏக்கர் நிலம் வக்பு வாரியம் கேட்கும் இடத்தில் வழங்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சன்னி வஃக்பு வாரிய வழக்கறிஞர் சஃபரியாஃப் ஜிலானி கூறுகையில், அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம். ஆனால் எங்களுக்கு திருப்தியில்லை.

இந்த தீர்ப்பை யாருடைய வெற்றி தோல்வியாக கருதக்கூடாது.  உச்சநீதிமன்ற நீதிபதிகளின் அனைத்து கருத்துக்களையும் நாங்கள் மறுக்கவில்லை. தீர்ப்புக்கு எதிராக எங்கும் எந்த போராட்டமும் நடத்தக்கூடாது. அயோத்தி வழக்கின் தீர்ப்பை முழுமையாக வாசித்து சீராய்வு மனு செய்யப்படும் என கூறினார்.