சரக்கடிக்க பணம் தராத தனியார் நிறுவன ஊழியர், மதுபாட்டிலால் குத்தி கொடூர கொலை..!



Pondicherry Villianur Man Killed by 2 Man Gang Police Arrest 1 Person

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வில்லியனூர், அரும்பார்த்தபுரம் புதுநகரில் வசித்து வருபவர் சீனிவாசன் என்ற மூர்த்தி (வயது 31). இவர் புதுச்சேரியில் செயல்பட்டு வரும் கொரியர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி ஹேமா. தம்பதிகளுக்கு கடந்த 3 வருடத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது வரை குழந்தை இல்லை. 

இந்நிலையில், நேற்று வீட்டில் இருந்து சென்ற சீனிவாசன் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராத நிலையில், அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் காணவில்லை. இதற்கிடையில், இன்று காலை வில்லியனூர் பத்துக்கன்னு சேந்தநத்தம் சுடுகாட்டில் வாலிபரின் சடலம் இரத்த வெள்ளத்தில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த வில்லியனூர் காவல் துறையினர், இளைஞரின் உடலை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாலிபர் குறித்து விசாரணை செய்கையில், அவர் மாயமான சீனிவாசன் என்பது உறுதியானது. 

Pondicherry

அவரின் மார்பு மற்றும் கழுத்து பகுதியில் சாராய பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டதும் அம்பலமானது. இதுதொடர்பாக 3 தனிப்படை அமைத்த காவல் துறையினர், கொலையாளிகளை கைது செய்ய விசாரணையை துரிதப்படுத்தினர். முதற்கட்ட விசாரணையில், அரும்பார்த்தபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த சாராயக்கடைக்கு சீனிவாசன் சாராயம் வாங்க வந்துள்ளார்.

அப்போது, ரூ.500 பணம் கொடுத்த நிலையில், இதனை சேந்தநத்தம் பகுதியை சேர்ந்த சஞ்சீவ் (வயது 25), புகழ் (வயது 24) ஆகியோர் பார்த்துள்ளனர். இதனால் சீனிவாசனிடம் மேற்படி பணம் இருக்கலாம் என்று எண்ணி, அவரிடம் பேச்சுக்கொடுத்து சுடுகாட்டுக்கு அழைத்து சென்று 3 பேரும் மதுபானம் அருந்தியுள்ளனர். போதை ஏறியதும் மூவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட, சாராயம் காலியானதால் சரக்கு வாங்க சீனிவாசனிடம் பணம் கேட்டுள்ளனர்.

அவர் பணம் கொடுக்க மறுப்பு தெரிவிக்கவே, சஞ்சீவ் மற்றும் புகழ் சேர்ந்து சாராய பாட்டிலை உடைத்து சீனிவாசனின் கழுத்து மற்றும் மார்பு பகுதியில் குத்தி கொலை செய்து, அவரிடம் இருந்த ரூ.2,300 ஐ களவாடி சென்றுள்ளனர். இதனையடுத்து, வில்லியனூர் இரயில் நிலையம் அருகே சுற்றிய சஞ்சீவி கைது செய்த அதிகாரிகள், புகழை தேடி வருகின்றனர்.