யூ-டியூபில் கற்றுக் கொண்டோம்..! கள்ள நோட்டு அச்சடித்த நபர் பரபரப்பு வாக்குமூலம்..!



We learned on YouTube that the person who printed the fake note made a sensational confession

பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரஹிப் (30). இவர் தற்போது டெல்லியில் உள்ள காஜிபூர் பகுதியில் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் பங்கஜ், இவர்கள் இருவரும் சேர்ந்து கள்ள நோட்டுகளை அச்சடிப்பதாக டெல்லி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் அப்துல் ரஹிப் வீட்டில் அதிரடியாக நுழைந்த காவல்துறையினர், அங்கு சோதனை மேற்கொண்டனர். சோதனையில் கள்ள நோட்டுகளை அச்சடித்த பிரிண்டர் சிக்கியது. பிரிண்டர் மற்றும் ரூ.38 ஆயிரம் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் அப்துல் ரஹிப்பை கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவரது கூட்டாளியான பங்கஜ் குறித்து தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவான பங்கஜை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும் இந்திய தண்டனைச் சட்டம் 489 A, 489B, 489 C மற்றும் 489 D உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அப்துல் ரஹிப்பிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில் யூ-டியூப் மூலம் பிரிண்டரைப் பயன்படுத்தி கள்ள நோட்டுகளை அச்சிடுவது பற்றி கற்றுக் கொண்டதாகவும், சுமார் 2 மாதங்களாக கூட்டாளிகள் இருவரும் கள்ளநோட்டு அச்சிடும் வேலையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. மேலும் டெல்லி, நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் தாங்கள் அச்சடித்த கள்ளநோட்டுகளை பயன்படுத்தி, பொருட்களை வாங்க முயன்றதும் தெரியவந்துள்ளது.