2024 நாடளுமன்ற தேர்தலில் முந்தப்போவது யார்?: பிரபல நிறுவனங்களின் பரபரப்பான கருத்து கணிப்பு முடிவுகள்..!
2024 மக்களவை தேர்தல் பிரதமர் வேட்பாளர்களில் யாருக்கு ஆதரவு என்ற கருத்து கணிப்பில் பிரதமர் மோடி முன்னிலை வகிக்கிறார்.
கடந்த ஆண்டு தமிழகம், மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி மற்றும் கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. இந்த 5 மாநிலங்களில் ஆட்சி அமைக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் மாநில முதல்வர்கள் செயல்பாடு எப்படி உள்ளது? 2014 மக்களவைத் தேர்தலில் பிரதமராக யாருக்கு ஆதரவு என்ற கேள்விகளுடன் ஐ.ஏ.என்.எஸ் மற்றும் சி-வோட்டர் நிறுவனங்கள் இணைந்து கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.
இதில் பிரதான கேள்வியாக பிரதமராக யாருக்கு ஆதரவு என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது, இந்த கேள்விக்கு எந்தெந்த மாநிலங்களில் யாருக்கு பெருவாரியான ஆதரவு உள்ளது என்பது பற்றி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகளில் காண்போம்.
இந்த நிறுவனங்கள் நடத்திய கருத்து கணிப்பில் பிரதமர் வேட்பாளர்களாக தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல் காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பனர்ஜி மற்றும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
அசாம் நிலவரம் : பிரதமர் மோடிக்கு 43 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். கெஜ்ரிவாலுக்கு 11.62% பேர் ஆதரவு தெரிவித்ததுடன் , ராகுல் காந்திக்கு 10.7% பேர் ஆதரவு அளித்துள்ளனர். மம்தா பனர்ஜிக்கு ஆதரவு இல்லை.
கேரளா நிலவரம் : பிரதமர் மோடிக்கு 28 சதவீதம் பேரும் , ராகுல் காந்திக்கு 20.38 சதவீதம் பேரும் , கெஜ்ரிவாலுக்கு 8.28 சதவீதம் பேரும் ஆதரவு அளித்துள்ளனர். மம்தா பனர்ஜிக்கு ஆதரவு இல்லை.
தமிழக நிலவரம் : பிரதமர் மோடிக்கு 29.56 சதவீதம் பேரும் , ராகுல்காந்திக்கு 24.65 சதவீதம் பேரும், மம்தா பானர்ஜிக்கு 5.23 சதவீதம் பேரும் ஆதரவு அளித்துள்ளனர். அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு இல்லை.
மேற்கு வங்க நிலவரம் : பிரதமர் மோடிக்கு 42.37 சதவீதம் பேரும், மம்தா பானர்ஜிக்கு 26.8 சதவீதம் பேரும் , ராகுல் காந்திக்கு 16.4 சதவீதம் பேரும் ஆதரவு அளித்துள்ளனர். அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு இல்லை.
புதுச்சேரி நிலவரம் : பிரதமர் மோடிக்கு 49. 69% பேரும், ராகுல் காந்திக்கு 3.62 சதவீதம் பேரும் ஆதரவு அளித்துள்ளனர் . மம்தா பனர்ஜி மற்றும் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு இல்லை.
ஐந்து மாநிலங்களிலும் பிரதமர் பதவிக்கு மிகவும் பொருத்தமான நபராக மோடிக்கு சராசரியாக 49.97 சதவீதம் பேரும் , ராகுல் காந்திக்கு 10.1 சதவீதம் பேரும் ஆதரவு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.