கறிக்குழம்புக்கு சரியான மெயின் டிஷ்... கேரளா புகழ் இதழ் அப்பம் செய்வது எப்படி?.. இல்லத்தரசிகளே அசத்துங்கள்.!
கேரளாவில் புகழ்பெற்ற காலை உணவான இதழ் அப்பம் எப்படி செய்வது என்று இன்று காணலாம். இந்த இதழ் அப்பத்தை கோழி குழம்பு அல்லது ஆட்டுக்கறி குழம்புடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
சீரக சம்பா அரிசி - ஒன்றரை கப்,
வறுத்த அரிசி சாதம் - மூன்று கரண்டி,
தேங்காய் - ஒன்று,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
முதலில் எடுத்துக் கொண்ட சீரக சம்பா அரிசியை கழுவி 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். தேங்காயை அரைத்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், மிக்ஸியில் சீரக சம்பா அரிசி, வடித்த சாதம், தேங்காய் பால் போன்றவற்றை சேர்த்து தேவையான அளவுக்கு உப்பு போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
இதனை தோசை சுடும் மாவுக்கு கொஞ்சம் அதிகமாக கலவை இருக்குமாறு தேங்காய் பால் ஊற்றி கிளறி வைத்துக் கொள்ளலாம். பின்னர் இட்லியை வேக வைப்பது போல பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வேக வைக்கும் ஸ்டாண்டை வைத்து, குழிவான தட்டின் உள்பகுதியில் சிறிதளவு நெய் அல்லது எண்ணெய் தடவி கரண்டியளவு மாவு ஊற்றி பாத்திரத்தை மூடவும்.
மூன்று முதல் நான்கு நிமிடம் கழித்து திறந்து, அதன் மேல் சிறிதளவு எண்ணெய் ஊற்றி ஒரு கரண்டி மாவை ஊற்றி மூடி வைக்க வேண்டும். இதன் பின் மீண்டும் இந்த முறையை செய்ய வேண்டும். இவ்வாறாக ஒவ்வொரு அடுக்கு தட்டும் நிரம்பும் வரை மாவை ஊற்றி வேக வைத்தால், பத்து நிமிடம் கழித்து இறக்க வேண்டும். சுவையான இதழ் அப்பம் தயார்.