பாழடைந்த கிணற்றுக்குள் கிடந்த எலும்புக்கூடு!.. பரபரப்படைந்த நகரம்!.. பதறிய மக்கள்..!
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், டி.வி.டி.காலனி பகுதியில் உள்ள செந்தூரான் நகர் 3 வது தெருவை சேர்ந்தவர் தங்கவேல். இவர் தற்போது குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான இடத்தில் கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணறு தற்போது பயன்பாடு இல்லாமல் குப்பைகள் நிறைந்து, பாழடைந்து காணப்படுகிறது. மேலும் அந்த கிணற்றில் கழிவுநீரும் தேங்கி உள்ளது.
இந்த நிலையில், நேற்று அந்த கிணற்றில் ஒரு மனித எலும்புக்கூடு கிடந்ததை, அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து கோட்டார் காவல் நிலையத்திற்கும், நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் கிணற்றை பார்வையிட்டனர். சற்று நேரத்தில் தீயணைப்பு வீரர்களும் அங்கு வந்தனர்.
கயிறு கட்டி கிணற்றினுள் இறங்கிய தீயணைப்பு வீரர்கள், கிணற்றின் ஒரு ஓரத்தில் கிடந்த மனித எலும்புக்கூட்டை ஒரு சாக்கில் கட்டி கிணற்றின் மேலே கொண்டு வந்தனர். பின்னர் அந்த எலும்புக்கூடு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு நேரில்வந்த நாகர்கோவில் துணை காவல் கண்காணிப்பாளர் நவீன்குமார், விசாரணை மேற்கொண்டார்.
முதற்கட்ட விசாரணையில், தினமும் இரவு நேரத்தில் அந்த கிணற்றின் அருகே ஒரு ஆசாமி மது அருந்தி வந்ததாகவும், அந்த ஆசாமி கடந்த சில நாட்களாக இங்கு வரவில்லை என்றும் தெரிய வந்தது. இதனால் அந்த ஆசாமி கிணற்றின் அருகே மது அருந்தும் போது, தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு யாரும் அவரை கொலை செய்து கிணற்றில் வீசினார்களா? என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.