சட்டங்கள் மேயருக்கு பொருந்தாதா?!.. சென்னை மேயர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்: நடவடிக்கை எடுக்கப்படுமா..?!
சென்னை மேயர் பிரியா முதல்வர் கான்வாய் வாகனத்தில் தொங்கியபடி பயணித்தாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க கூறி புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் கான்வாய் வாகனத்தில் தொங்கியபடி பயணித்த சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காசிமேடு பகுதியில் மாண்டஸ் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்தார். அப்போது சென்னை மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் எபனேசர் ஆகியோர் முதலமைச்சரின் கான்வாய் வாகனத்தில் தொங்கியபடி சென்றனர்.
இதுபோன்று வாகனத்தில் தொங்கி செல்வது, மத்திய மோட்டார் வாகன சட்டம் 1988-ன் 93-வது பிரிவின் கீழ் குற்றம் என்றும், அதனால் முதல்வரின் வாகனத்தில் தொங்கியபடி சென்ற சென்னை மேயர் பிரியா மற்றும் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர் செல்வகுமார் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இணையதளம் மூலமாக புகார் அளித்துள்ளார்.
மேலும் பொதுமக்கள் வாகனத்தில் தொங்கியபடி பயணித்தால் போலீசார் நடவடிக்கை எடுக்கின்றனர். எனவே இவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகார் குறித்து போலீசார் செல்வகுமாரை நேரில் அழைத்து இது தொடர்பான வீடியோ காட்சிகள் மற்றும் அவரிடம் இருக்கும் ஆதாரங்கள் போன்றவற்றை கேட்டுப் பெறுவார்கள். பின்னர் இந்த வழக்கில் எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெரிய வரும்.