தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் அ.தி.மு.க பொன்விழா: இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி..!
அ.தி.மு.க தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்து 51 ஆவது ஆண்டு தொடங்குவதை ஒட்டி அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
அ.தி.மு.க. பொன்விழா ஆண்டை நிறைவு செய்து, வருகிற 17 ஆம் தேதியன்று 51 வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு 17 ஆம் தேதி, 20 ஆம் தேதி மற்றும் 26-ஆம் தேதி ஆகிய 3 நாட்கள் அ.தி.மு.க. பொன்விழா நிறைவு மற்றும் 51 வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள், கட்சியின் அமைப்பு ரீதியாக செயல்பட்டு கொண்டிருக்கும் அனைத்து மாவட்டங்களிலும், அமைப்புகள் செயல்பட்டுகொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம், கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.
அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும், கட்சி அமைப்புகள் செயல்பட்டுகொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், கேரளா, டெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் 17 ஆம் தேதியன்று ஆங்காங்கே, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது உருவச்சிலைகளுக்கும், படங்களுக்கும் மாலை அணிவித்து இனிப்பு வழங்கியும், ஏழை-எளியோருக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கியும் சிறப்பிக்கவேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.