தொடர்கதையாகும் லாக்கப் மரணங்கள்; தமிழக முதல்வர் தனது பொறுப்பை உணர்ந்து செயல்படுகிறாரா?!: அண்ணாமலை தடாலடி..!



Annamalai has said that the death of the youth who went to the police station to sign is reprehensible

கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல் நிலையத்திற்கு கையெழுத்து போட சென்ற இளைஞர் மரணமடைந்துள்ளது கண்டிக்கத்தக்கது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

இது குறித்து தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

தொடர்கதையாகும் லாக்கப் மரணங்கள் தமிழக மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தின் தவிர்க்க முடியாத சோகமாக லாக்கப் மரணங்கள் மாறியுள்ளது. தமிழக அரசு மற்றும் தமிழக காவல்துறையின் வழக்குகளை கையாளும் முறை மிருகத்தனமான மாறிவரும் நிலையில், தமிழக முதல்வர் தான் வகிக்கும் பொறுப்பை உணர்ந்துள்ளாரா.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே காவல் நிலையத்தில் கையெழுத்துப் போடச் சென்ற 22 வயது இளைஞர் அஜித் என்பவர் காவல்நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு மரணித்ததாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. இறந்தவர் குடும்பத்திற்கு தமிழக பாரதிய ஜனதாவின் ஆழ்ந்த இரங்கல்கள்.

இறந்த இளைஞனின் தாயின் வேதனையைப் போக்க இழப்பீடு மட்டும் போதாது. தி.மு.க அரசு ஆட்சி அமைத்த நாள் முதல் தமிழகத்தில் லாக்கப் மரணங்கள் தொடர்கதையாகிவிட்டது. கட்டுப்பாடின்றி இருக்கிறதா தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு என்ற சந்தேகத்தையும் இதுபோன்ற சம்பவங்கள் எழுப்புகிறது.

சிபிசிஐடிக்கு இந்த வழக்கை உடனடியாக மாற்றி குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தர இந்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவோம். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.