பிரதமர் முன்னிலையில் திரவுபதி முர்மு அவமதிக்கப்பட்டாரா.?! வைரல் புகைப்படம்.. குவியும் கண்டனங்கள்!



If Draupadi murmu insults by pm modi

சமுதாயத்தில் சிறப்பாக தொண்டு செய்து வருபவர்களுக்கு கௌரவமளிக்கும் விதமாக பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு 5 தலைவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த சமூக சீர்திருத்தவாதியுமான மறைந்த கர்பூரி தாக்கூர், மறைந்த பிரதமர்கள் சவுத்ரி சரண்சிங்,பி.வி.நரசிம்மராவ்,  பா.ஜனதா தலைவராகவும், துணை பிரதமராகவும் பணியாற்றிய எல்.கே.அத்வானி, தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோர்  தான் இந்தாண்டு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Draupadi Murmu

இதில் அத்வானியை தவிர மற்ற 4 பேருக்கும் ஜனாதிபதி மாளிகையில் வைத்தவாறு பாரத ரத்னா விருது அளிக்கப்பட்டது. அந்த விருதுகளை அவர்களது குடும்பத்தினர் வாங்கிக்கொண்டனர்.

இத்தகைய நிலையில், வயது மூப்பினால் எல்.கே.அத்வானிக்கு அவருடைய வீட்டிற்கே சென்று ஜனாதிபதி திரவுபதி முர்மு பாரத ரத்னா விருதை வழங்கியுள்ளார். அப்போது, பிரதமர் நரேந்திரமோடி , துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், மற்றும் வெங்கையா நாயுடு ஆகியோர் உடனிருந்தனர்.

இதுகுறித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில், அது நிறைய கண்டனங்களை குவித்து வருகிறது. அதற்கு காரணம் அந்த புகைப்படத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மட்டும் இருக்கை இல்லாமல் நிற்கிறார். மற்றவர்கள் அமர்ந்தவாறு போஸ் கொடுக்கின்றனர்.

Draupadi Murmu

இதற்கு பல்வேறு அமைப்பினரும் கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் இதுகுறித்து தனது கண்டன பதிவில், "#பிரதமர், #மேனாள்_துணைபிரதமர் ஆகியோருக்கு தேசத்தின் முதல் குடிமகவான குடியரசுத் தலைவரை எங்ஙனம் மதிக்க வேண்டும் என்பது தெரியாதா?  தேசத்தின் தலைமை, குறிப்பாக அரசின் தலைமை, குடியரசுத் தலைவர் தான் என்பதை வரையறுத்துக் கூறும் அரசமைப்புச் சட்டத்தையேனும் மதிக்க வேண்டும் என்பதுகூட தெரியாதா? இந்த அவமதிப்பு- 

இவர் பெண்மணி என்பதாலா? அல்லது 

இவர் பழங்குடி என்பதாலா?

அல்லது 

அரசமைப்புச் சட்டம் ஒரு பொருட்டில்லை என்பதாலா?இப்படியொரு படம் வெளியானது அறியாமல் நிகழ்ந்ததா? திட்டமிட்டே நடந்ததா? குடியரசுத் தலைவரை நிற்கவைத்து படம்பிடித்து வெளியிடுவது என்னவகை பண்பாடு?  

பெரும் அதிர்ச்சியளிக்கிறது."என்று தெரிவித்துள்ளார்.