மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முன்னாள் மாணவனாகவே இங்கு வந்துள்ளேன்!. முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி..!
சென்னை சேத்துப்பட்டு பகுதியில் இயங்கிவரும் கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலை பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வரும், அந்த பள்ளியின் முன்னாள் மாணவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின் பழைய நிகழ்வுகள் பலவற்றை நினைகூர்ந்தார். நிகழ்ச்சியில் மேலும் அவர் பேசியதாவது:-
இந்த பள்ளிக்கு நான் முதலமைச்சராக வரவில்லை, முன்னாள் மாணவனாக வந்துள்ளேன். இளம்பருவத்தில் படித்த பள்ளிக்கு வருவது எப்போதும் மகிழ்ச்சியளிக்கும். அந்த மகிழ்ச்சியில் நேற்று இரவு எனக்கு தூக்கம் வரவில்லை. பள்ளியில் படித்த காலத்தில் எப்படியெல்லாம் துள்ளித் திரிந்தோம் என்ற நினைவுகள் என்னை ஆக்கிரமித்திருந்தது.
நான் இந்த பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் எனது தந்தை கருணாநிதி, போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அமைச்சரின் மகனாக நான் பள்ளிக்கு வருவதை எனது தந்தை விரும்பியதில்லை. படிக்கின்ற காலத்தில் நானும் அதையெல்லாம் வெளியில் சொன்னதில்லை. இது என்னுடன் படித்த அனைவருக்கும் தெரியும்.
பள்ளிப்பருவத்தில் தினமும் எங்கள் வீட்டில் இருந்து ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வரை நடந்து வந்து, 29 சி பேருந்தைப் பிடித்து ஸ்டெர்லிங் ரோடு நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து பள்ளிக்கு நடந்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தேன். அப்படி வந்ததற்கு பல காரணங்கள் உண்டு, அவற்றையெல்லாம் இப்போது வெளிப்படையாக சொல்ல முடியாது. அது ஒரு பசுமையான நினைவு.
இங்கு வந்திருக்கும் அனைவரையும் பார்க்கும் போது 'ஞாபகம் வருதே.!. ஞாபகம் வருதே..!" என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது. ஒவ்வொரு மனிதனையும் மகிழ்ச்சியுடன் வைத்திருப்பது பழைய நினைவுகள்தான். இந்த பள்ளியின் மாணவனாக எனக்கும் மகிழ்ச்சியளிக்ககூடிய பல நினைவுகள் உள்ளது. நான் அரசியலுக்கு வருவேன் என்றோ, ஒரு கட்சியின் தலைவராக, ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக வருவேன் என்றோ அந்த காலகட்டத்தில் எண்ணியதில்லை. என்னுடன் படித்தவர்களும் அப்படி எண்ணியிருக்க வாய்ப்பில்லை.
இப்படி ஒரு உயர்ந்த பதவியை நான் அடைந்ததற்கு இந்த பள்ளியும் ஒரு முக்கிய காரணம் என்பதை எண்ணி நான் பெருமைப்படுகிறேன் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.