தி.மு.க ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை!.. 2024 தேர்தலில் அ.தி.மு.க தலைமையில் மெகா கூட்டணி: ஈ.பி.எஸ் அதிரடி..!



Mega alliance led by ADMK in 2024 elections

கனமழையால் பாதிக்கப்பட்ட கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் எதிர்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி நேற்று ஆய்வு செய்தார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் விளைநிலங்களில் ஏற்பட்டுள்ள சேதங்களை பார்வையிட்ட எடப்பாடி பழனிசாமி பின்னர் தரங்கம்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட தலைச்சங்காடு ஊராட்சியில் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை பார்வையிட்டார்.

இதனை தொடர்ந்து தலைச்சங்காடு பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் தலைச்சங்காடு ஊராட்சியை சேர்ந்த 1308 குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 கிலோ அரிசி, ஜமுக்காளம் மற்றும் வேட்டி, புடவைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு அழிந்துவிட்டது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதால், இளைய தலைமுறையினர் சீரழிந்து வருகின்றனர். அ.தி.மு.க தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் இரண்டு வெவ்வேறு கட்சிகள். 2024 நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க தலைமையில் மெகா கூட்டணி அமையும். அ.தி.முக கூட்டணியில் அ.ம.மு.கவுக்கு ஒருபோதும் இடம் கிடையாது.

தமிழகத்தில் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக மு. க. ஸ்டாலின் கூறுகிறார். எனக்கு தெரிந்து தி.மு.க ஆட்சியில் மு.க.ஸ்டாலின் மட்டும்தான் மகிழ்ச்சியாக உள்ளார் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களை தி.மு.க அரசு முடக்கியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தரங்கம்பாடி மற்றும் சீர்காழி தாலுகாவில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

ஆனால், அந்த பகுதிகளோடு சேர்த்து பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மற்றும் குத்தாலம் தாலுக்கா பகுதி மக்களுக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 3000 ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும். 10 நாட்களாக வேலை இல்லாததால் தினக்கூலி தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் காரணமாக நிவாரண தொகையை 3000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.