உங்கள் ஆட்சியில் விலை அதிகரித்த அத்தனை பொருட்களிலும் பிரதமரின் படங்கள் இடம்பெறும்: நிர்மலா சீத்தாராமனை சீண்டும் தெலுங்கானா எம்.பி..!
தெலங்கானா மாநிலம், கம்மாரெட்டி மாவட்டம், பீர்கூர் நகரில் உள்ள ஒரு ரேஷன் கடையில் கடந்த சில வாரங்ககுக்கு முன்பு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு நடத்தினார். அப்போது அந்த ரேஷன் கடையில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் இல்லாததை கண்டு அந்த மாவட்ட ஆட்சியரை நிர்மலா சீதாராமன் கண்டித்தார்.
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனையடுத்து தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினர் கேஸ் சிலிண்டர்களில் பிரதமர் மோடியின் படத்தை ஒட்டி நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்தனர். இந்த நிலையில், பிரதமர் மோடி படம் இடம்பெறும் விவகாரத்தில் நிர்மலா சீதாராமனுக்கு தெலங்கானா மேலவை உறுப்பினரும், அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகளுமான கவிதா பதிலடி கொடுத்துள்ளார்.
ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற தெலங்கானா அரசின் ஆசரா திட்ட ஓய்வூதியம் வழங்கும் நிகழ்ச்சியில் கவிதா பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பேசுகையில் கூறியதாவது:- மத்திய நிதியமைச்சர் இங்கு வந்தது நல்லது, விருந்தினர்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். ரேஷன் கடைக்கு சென்ற அவர் பிரதமர் மோடியின் படம் இல்லாதது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் சண்டையிட்டார். பிரதமரின் படங்கள் ரேஷன் கடைகளுக்கு வெளியே வைக்கப்படுவதில்லை. நேரு காலத்திலோ, மன்மோகன் சிங்கின் காலத்திலோ அல்லது வாஜ்பாய் காலத்திலோ கூட யாருடைய படங்களையும் வைத்தது இல்லை.
நிதியமைச்சர் அவர்களே, நீங்கள் பிரதமரின் படங்களை வைக்க விரும்பினால் நாங்கள் அதை நிச்சயம் செய்ய தயாராக உள்ளோம். உங்கள் ஆட்சியில் எந்த பொருக்களின் விலை அதிகரித்ததோ அந்த பொருட்களில், பிரதமர் மோடியின் படங்களை வைக்க தயாராக உள்ளோம். கேஸ் சிலிண்டர்கள், யூரியா பாக்கெட்டுகள், எண்ணெய் மற்றும் பருப்பு பாக்கெட்டுகளில் வைப்போம். மேலும் பெட்ரோல், டீசல் நிலையங்களிலும் வைப்போம். எங்கெல்லாம் செலவுகள் அதிகரிக்கிறதோ, அங்கெல்லாம் பிரதமர் நரேந்திர மோடி ஜீயின் படங்களை வைப்போம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.