துரைமுருகன் வீட்டில் திடீர் சோதனை! அங்கு நடந்த பரபரப்பு! வெளியான தகவல்கள்!
வரும் பாராளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் திமுக சார்பில், திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். இந்நிலையில் துரைமுருகன் வீட்டில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்யப்படுவதற்காக, பணம், பரிசுப்பொருட்கள் இருப்பதாக தகவல் வந்துள்ளது.
இதனையடுத்து வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று இரவு 10 மணிக்கு திடீரென சோதனையிட வருகை தந்தனர். அப்போது துரைமுருகன், கதிர் ஆனந்த் உள்ளிட்டோா் வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது.
மேலும் துரைமுருகனுக்கு உடல்நிலை பிரச்சனை இருப்பதால் இந்த நேரத்தில் சோதனை செய்ய வேண்டாம். நீங்கள் காலையில் சோதனையைத் தொடங்குங்கள் என்று துரைமுருகன் தரப்பில் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். ஆனாலும் அதிகாரிகள் அவர்களின் பேச்சை ஏற்காமல் சோதனையை தொடங்க ஆரம்பித்தனர்.இந்தநிலையில் அதிகாரிகளுடன் திமுக தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல் துயிரையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நள்ளிரவு 3 மணியளவில் துரைமுருகன் வீட்டுக்குள் சென்ற அதிகாரிகள் தொடர்ந்து 5 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை செய்து வந்தனர். அப்போது ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை என தகவல்கள் கூறுகின்றன. எனினும் தொடர்ந்து சோதனை நடைபெற்றது.
துரைமுருகனுக்கு சொந்தமான பள்ளி, கல்லூரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையை தொடர்ந்து வருகின்றனர். இதனையடுத்து இன்று காலை 8.30 மணியளவில் சோதனை நிறைவுப் பெற்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.