இலங்கையுடனான உறவை மத்திய அரசு உடனடியாக துண்டிக்க வேண்டும்: சீமான் வலியுறுத்தல்..!



Seeman insists that the central government should immediately sever relations with Sri Lanka

இலங்கையில் அதிகளவில் சீன ராணுவம் குவிக்கப்படும் நிலையில் தமிழகக் கடலோரப் பாதுகாப்பை அதிகரிப்பதோடு, இலங்கையுடனான உறவை இந்திய ஒன்றிய அரசு உடனடியாகத் துண்டிக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.

இலங்கை அரசுடனான இந்திய உறவு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இது குறித்து மேலும் கூறியிருப்பதாவது:-

இலங்கையில் சீன ராணுவம் அதிகளவில் குவிக்கப்படுவதால் தமிழ்நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது குறித்து, மாநில உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளதாக ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. சீனாவுடன் கூட்டு வைத்து இந்தியாவின் பாதுகாப்புக்கு கேடு விளைவிக்கும் இலங்கையுடன் தொடர்ந்து நட்பு பாராட்டும் இந்திய ஒன்றிய அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

இரண்டு இலட்சம் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்ய இலங்கைக்குத் துணை நின்றது, அந்தக் குற்றத்திலிருந்து தப்பிக்கப் பன்னாட்டு அரங்கில் ஆதரவளிப்பது, இராணுவப் பயிற்சியளிப்பது, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுவர உதவியது என இலங்கையை நெருங்கிய நட்பு நாடாகக் கருதி, அத்தனை உதவிகளையும் இந்திய அரசு செய்துவந்த போதிலும், அந்த நன்றி சிறிதுமின்றி இலங்கை சீனாவுடன் சேர்ந்து இந்தியாவிற்கு எதிராகவே தொடர்ந்து செயற்பட்டு வருகிறது.

விடுதலைப்புலிகளை அழிப்பதுதான் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஏற்றது என்று பேசிய பெருமக்கள், இனப்படுகொலையாளர்களுடன் கைகுலுக்கி கொண்டாடியவர்கள் இப்போது எங்கே சென்றார்கள்? இலங்கையின் இந்த துரோகத்திற்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்? பாகிஸ்தானுக்கு எதிராகப் பாய்ந்துகொண்டு கருத்துகூறும் அப்பெருமக்கள், லடாக்கை ஆக்கிரமித்து, அருணாச்சல பிரதேசத்தை சொந்தம் கொண்டாடி, தற்போது இலங்கையிலும் படையைக் குவித்து இந்தியாவைச் சுற்றிவளைத்துள்ள சீனா குறித்தும், அதற்கு துணைநிற்கும் இலங்கை குறித்தும் வாய் திறக்காமல் அமைதி காப்பது ஏன்? இந்தியா உண்மையிலேயே அவர்களுக்கு தாய் நாடாக இருந்திருந்தால் இந்நேரம் இலங்கை, சீனாவுக்கு எதிராக வாய் திறந்திருப்பார்கள்.

சொந்த நாட்டு குடிகளாகிய 10 கோடி தமிழர்களின் உறவையும், உணர்வையும்விட, 2 கோடி சிங்களர்களின் நட்பையே பெரிதாக மதித்து தமிழினத்திற்குப் பச்சைத் துரோகத்தைச் செய்தது இந்திய ஒன்றிய அரசு. இந்திய ஒன்றியத்தில் காங்கிரசு, பாஜக என எந்த அரசு அமைந்தாலும் இலங்கையுடன் நட்புறவை கடைபிடிக்கும் மிகத்தவறான வெளியுறவுக் கொள்கையை மட்டும் இன்றுவரை மாற்றியபாடில்லை. அதற்கான விளைவுகளையே தற்போது இந்தியா அனுபவிக்கத் தொடங்கியுள்ளது.

இலங்கையைப் பொறுத்தவரை இந்தியாவைவிட சீனாவையே முதன்மையான நட்பு நாடாகக் கருதி முக்கியத்துவம் அளித்துவருகிறது. இந்தியாவின் பாதுகாப்பு குறித்து எள்முனை அளவும் கவலையின்றித் தனது துறைமுகங்களை சீனாவிற்குத் தரைவார்த்ததோடு, இந்தியாவின் எச்சரிக்கையையும் மீறி சீன உளவுக்கப்பலை துறைமுகத்திற்குள் அனுமதித்து இந்தியாவின் முகத்தில் கரியையும் பூசியது. தற்போது அதைவிடப் பேராபத்தாக சீன இராணுவத்தையே தன் நாட்டிற்குள் அதிகளவில் குவிக்க அனுமதித்து, சீனாவின் ராஜதந்திர சூழ்ச்சிகளுக்குத் துணைபோய் இந்தியாவின் பாதுகாப்யையே முற்று முழுதாகக் கேள்விக்குறியாக்கியுள்ளது. தமிழீழ மக்கள் இராணுவமான விடுதலை புலிகள் இயக்கம், தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தலைமையில் ஈழ மண்ணில் நிலைபெற்றிருந்த நாள்வரை, இலங்கைக்குள் எந்த இடத்திலும் சீனாவால் கால் ஊன்றவே முடியவில்லை என்ற உண்மையை இந்திய பெருநாட்டின் ஆட்சியாளர்கள் இப்போதாவது புரிந்து தெளியவேண்டும்.

ஈழ விடுதலைப் போராட்டத்தை அழிக்கத் துணைபோனது எவ்வளவு பெரிய வரலாற்றுப் பிழை என்பதை சமகால அரசியல் சூழல்கள் இந்தியாவிற்கு உணர்த்தத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் உண்மையான பாதுகாப்பு என்பது ஈழமும், தமிழர்களும்தானே தவிர இலங்கையும், சிங்களர்களும் அல்ல என்பதை இந்திய அரசு இனியாவது உணர்ந்து, இலங்கையை நட்பு நாடு என்று கூறுவதைக் கைவிட வேண்டும். எதிர்காலத்தில் இந்தியாவின் தென்பகுதியைத் தாக்குவதற்கான ஆயுதப் படைத்தளமாக இலங்கையைப் பயன்படுத்த நினைக்கும் சீனாவின் முயற்சியை இந்தியா முறியடிக்காவிடில் மிகப்பெரிய இழைப்பை இந்தியப் பெருநாடு சந்திக்க வேண்டியிருக்குமென முன்கூட்டியே எச்சரிக்கிறேன்.

ஆகவே, இந்தியாவிற்கு எதிரான சீனாவின் சூழ்ச்சிகளுக்குத் துணைபோகும் இலங்கைக்குப் பதிலடி தரும் விதமாக, அந்நாட்டுடனான அரசியல் மற்றும் வர்த்தக உறவை உடனடியாகத் துண்டித்து, இலங்கை குறித்தான வெளியுறவுக் கொள்கையையும் மாற்ற வேண்டும். மேலும், பன்னாட்டு அரங்கில் இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே என்பதை நிறுவுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு, தமிழீழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கான அரசு நுட்ப முன்னெடுப்புகளையும் இந்திய அரசு தொடங்க வேண்டும். தற்போது இலங்கையில் குவிக்கப்பட்டுள்ள சீன இராணுவத்தினால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலிலிருந்து தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களைப் பாதுகாக்க கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.