மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ராஜீவ்காந்தி கொலைவழக்கு தொடர்பாக தமிழக தலைவர்களின் ஒருமித்த கருத்து
இந்திய முன்னாள் பிரதமர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சிறையிலுள்ள பேரறிவாளன்,சாந்தன் ,முருகன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்யக்கோரிய தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உடனடியாக நிவேற்ற வேண்டும்' என்று மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
'ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலைசெய்ய பரிந்துரைக்க வேண்டும்' என்று தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், அந்தத் தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பட்டது. அந்தத் தீர்மானத்தை ஆளுநர் உடனடியாகப் பரிந்துரைத்து, ஏழு பேரையும் விடுதலைசெய்யும் ஆணையைப் பிறப்பிக்க வேண்டும் என்று தலைவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இது தொடர்பான எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவில், 'ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 27 வருடங்களாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலைசெய்ய வேண்டுமென்ற தமிழக அமைச்சரவை முடிவை ஏற்று, அனைத்து தமிழர்களும் மகிழ்ச்சியடையும் வகையில் ஆளுநர் உடனடியாக விடுதலைசெய்யும் ஆணையைப் பிறப்பிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பான டி.டி.வி.தினகரன் ட்விட்டர் பதிவில், 'எட்டு கோடி தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நொடிப்பொழுதும் தாமதிக்காமல் உடனடியாக தமிழக அரசின் தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்கி, 27 வருடங்களாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் 7 தமிழர்களையும் விடுவிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். பேரறிவாளன் உட்பட, ஏழு தமிழர்களின் விடுதலையில் மேலும் தாமதம் ஏற்படாமல் இருக்க, தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், 'தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று தாமதமின்றி ஏழு பேரையும் விடுதலைசெய்ய ஆளுநர் உத்தரவிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். அமைச்சரவை பரிந்துரை குறித்து மத்திய அரசிடம் ஆளுநர் கருத்து கேட்கத் தேவையில்லை. கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுவித்து, தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றக்கூடிய வரலாற்று வாய்ப்பு தமிழக ஆளுநருக்குக் கிடைத்துள்ளது. அதைப் பயன்படுத்தி, நல்லதொரு முடிவை விரைந்து எடுக்குமாறு ஆளுநரை வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து பழ.நெடுமாறன் அறிக்கையில், 'தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை கால தாமதம் செய்யாமல், உடனடியாக அவர்களை விடுதலைசெய்ய முன் வருமாறு ஆளநரை வேண்டிக்கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.