சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது: இதனை மாற்ற முயல்வது நல்லதல்ல!, சீமான் கண்டனம்..!



The law says that the status quo must remain as it was before independence

ஞான வாபி மசூதியில் சென்று காசி விஸ்வநாதரை வழிபட வேண்டுமென்று ஐந்து பெண்கள் அளித்த மனு விசாரணைக்கு உகந்தது எனக் கூறியிருக்கும் வாரணாசி நீதிமன்றத்தின் தீர்ப்பானது பெரும் அதிர்ச்சியளிக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள சீமான் மேலும் கூறியிருப்பதாவது:-

பாபர் மசூதியை இடித்துத் தகர்த்து நாட்டைத் துண்டாடியக் கொடும் அநீதி, வரலாற்றில் கறுப்புப்பக்கமாய் இருக்கையில் மீண்டும் அதேபோன்றதொரு செயலுக்கு அடித்தளமிடும் மதவாதிகளின் சதிச்செயலுக்கு வாய்ப்பளித்தது போல வந்திருக்கும் தீர்ப்பு ஏற்கத்தக்கதல்ல.

1991ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வழிபாட்டுத்தலங்கள் சிறப்புச்சட்டம், 1947 ஆம் ஆண்டுக்கு முன்பு வழிபாட்டுத்தலங்கள் எந்த நிலைமையில் இருந்ததோ அதே நிலைமையே நீடிக்க வேண்டும் எனக்கூறியிருக்கும் நிலையில், அச்சட்டத்துக்கு முற்றிலும் நேர்மாறான வகையில் வழங்கப்பட்டிருக்கும் இத்தீர்ப்பு நாட்டின் ஒற்றுமைக்கும், மக்களின் நலனுக்குமெதிரானது என அறுதியிட்டுக் கூறுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.