தி.மு.க உட்கட்சி தேர்தலில் கோஷ்டி மோதல்..! வலுக்கும் எதிர்ப்பு..! கூண்டோடு காலியாகிறதா திருவாரூர் தி.மு.க கூடாரம்?!.



Tiruvarur DMK tent empty with cage

தி.மு.க-வில் ஒன்றியங்களுக்கான உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்ட ஒன்றியங்களுக்கு நடந்த உட்கட்சித் தேர்தலில் நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.  இதில், நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளராக ஆனந்த் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தலைமை அறிவித்திருக்கிறது.

மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரான டி.ஆர்.பி.ராஜா ஆதரவாளர் ஆனந்த் என்று கூறிப்படுகிறது. ஆனால் நீடாமங்கலம் ஒன்றியத்தில் வாக்களிக்க தகுதியுள்ள 280 தி.மு.க பொறுப்பாளர்களில் அண்ணாதுரை என்பவருக்கு 216 பேர் ஆதரவாக வாக்களித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டி.ஆர்.பி.ராஜா பரிந்துரையின் பேரில் ஆனந்த் என்பவரை நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளராக தலைமை அறிவித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இதன் காரணமாக தி.மு.க தலைமையின் அறிவிப்புக்கு எதிராக கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தி.மு.க தலைமை ஒன்றிய செயலாளராக ஆனந்த் அறிவிக்கப்பட்டதை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். அவ்வாறு திரும்பப் பெறவில்லை என்றால் அண்ணாதுரை ஆதரவாளர்களான நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் 3பேர் , ஊராட்சி மன்றத் தலைவர்கள் 6 பேர் , மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஒன்றிய பிரதிநிதி கழகச் செயலாளர்கள் என 200க்கும் மேற்பட்டோர் தங்கள் பதவியை நாளை மறுதினம் ராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. 

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மாள் சமாதி அமைந்திருக்கும் திருவாரூர் அருகிலுள்ள காட்டூருக்கு சென்று அங்கே சமாதி முன்பாக ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்க போவதாக அறிவித்துள்ளனர்.