உங்க கட்சிக்காரங்க தயவு இல்லாமல் நடக்குமா? - தகுதியுள்ள குடும்பத்தலைவி விவகாரத்தில், பகீர் சந்தேகத்தை கிளப்பும் டிடிவி.!



TTV Dhinakaran Statement about Women Rights Rs 1000 

 

கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றியடைந்த திமுக, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. தேர்தல் பிரச்சார கூட்டத்தின்போது முதல்வர் மு.க ஸ்டாலின் ரேஷன் அட்டைதாரர்களான இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தார். ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் கழித்தபின், மகளிர் உரிமைத்தொகை பெற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

அதன்படி, முதியோர் உதவித்தொகை, ஓ.ஏ.பி உதவித்தொகை, மத்திய & மாநில அரசு பணியாளர்களின் குடும்பம், ஆண்டுக்கு ரூ.2.5 இலட்சத்திற்கும் அதிகமான சம்பளம் பெரும் குடும்பங்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்பட மாட்டாது என்று பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இருக்கின்றன. இவை ரேஷன் கடைகள் மூலமாக விண்ணப்பங்கள் நிரப்பி அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்விட் பதிவில், "அனைத்து மகளிருக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்ததற்கு நேர்மாறாக தகுதியுள்ள மகளிருக்கு மட்டுமே வழங்கப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து தற்போது தகுதிப்படைத்த மகளிர் யார் என்ற அறிவிப்பை முதலமைச்சர் திரு.ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார்.

TTV Dhinakaran Statement

நியாயவிலை கடைகளில் முகாம் அமைக்கப்படும், அங்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும், ஆதார் அட்டை,ரேஷன் அட்டை இல்லாத தகுதிவாய்ந்த மகளிரை அதிகாரிகள் கண்டறிய வேண்டும் என்றெல்லாம் உத்தரவிட்டிருப்பது இந்தத் திட்டத்தை ஆளும்கட்சியினரின் தலையீடு இல்லாமல் முறையாக செயல்படுத்த முடியுமா? என்ற சந்தேகத்தை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் தி.மு.க ஆட்சி மீது எழுந்த அதிருப்தியை சரி செய்யவும், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறுவதற்காக மக்களின் வரிப் பணத்தில் இந்தத் திட்டத்தை அவசரகதியில் திமுக செயல்படுத்தத் துடிப்பதாகவே பொதுமக்கள் கருதுகின்றனர்.

அறிவிப்பது ஒன்றும், செயல்படுத்துவது வேறாகவும் இருப்பதே திமுக அரசின் பாரம்பரிய நடைமுறை என்பது இந்த விஷயத்திலும் வெட்டவெளிச்சமாகி இருக்கிறது. ஆகவே வாக்குறுதி அளித்தபடி, மக்களை ஏமாற்றாமல் தெளிவான திட்டத்தோடு அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகையை நிபந்தனையின்றி வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்" என கூறியுள்ளார்.