கேப்டனே இப்படி பண்ணலாமா.? அவரே வெளியிட்ட தகவலால் மூன்றரை ஆண்டுகள் விளையாட தடை.!!



Brendan Taylor Banned 3.5 years to play

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிரன்டன் டெய்லருக்கு விளையாடுவதற்கு மூன்றரை ஆண்டுகள் தடை விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.

35 வயதான பிரன்டன் டெய்லர் ஜிம்பாப்வே அணிக்காக 34 டெஸ்ட், 205 ஒருநாள் மற்றும் 45 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இவர் கடந்த 24ஆம் தேதி சமூகவலைதளத்தில் பரபரப்பான ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டார். 

அந்த பதிவில், ஜிம்பாப்வேயில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்துவதற்கான ஸ்பான்சர்ஷிப் சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசிக்க கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியா வருமாறு தொழிலதிபர் ஒருவரின் அழைப்பை ஏற்று சென்றதாகவும், அப்போது நடந்த மதுவிருந்தின் போது தனக்கு அளித்த கோகைன் போதைப்பொருளை உட்கொண்டதாகவும், அடுத்த நாளில் அந்த வீடியோவை காட்டி அந்த நபர்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டத்தில் ஈடுபட தன்னை மிரட்டியதாகவும் தெரிவித்திருந்தார்.

Brendan Taylor

இதனையடுத்து அங்கிருந்து தப்பித்தால் போதும் என்ற பயத்தில் சூதாட்டத்தில் ஈடுபட முன்தொகையாக அளித்த ரூ.11 லட்சத்தை பெற்றுக்கொண்டு நாடு திரும்பியதாகவும் கூறியிருந்தார். தனது குடும்பத்தின் பாதுகாப்பு கருதி இந்த விஷயத்தை ஐ.சி.சி- யிடம் உடனடியாக தெரிவிக்கவில்லை என்றும் 3 மாதம் கழித்து ஐ.சி.சி.யிடம் புகார் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் பிரன்டன் டெய்லர் மீதான சூதாட்ட சர்ச்சை குறித்து விசாரணை நடத்திய ஐ.சி.சி. அவர் கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் பங்கேற்க மூன்றரை ஆண்டுகள் தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.