மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மெகா ஃபைனலில் மோதும் சென்னை-குஜராத் அணிகள்..!! கோப்பையை வென்று மகுடம் சூடப் போவது யார்..?!!
ஆமதாபாத்தில் இன்று நடைபெறும் பிரம்மாண்ட இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், லீக் போட்டிகள் அனைத்தும் நடந்து முடிந்துள்ளன. புள்ளிகளின் அடிப்படையில் குஜராத், சென்னை, லக்னோ மற்றும் மும்பை அணிகள் ப்ளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன.
கடந்த 24 ஆம் தேதி தொடங்கிய ப்ளே-ஆப் சுற்றின் முதலாவது தகுதி சுற்று போட்டியில் குஜராத் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதன் பின்னர் நடைபெற்ற எலிமினேட்டர் என்கிற வெளியேற்றுதல் சுற்றில் லக்னோ அணியை 71 ரன்கள் வித்தியாசத்தில் பந்தாடிய மும்பை அணி 2 வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது.
நேற்று முன்தினம் நடைபெற்ற 2 வது தகுதி சுற்று போட்டியில் மும்பை அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம், குஜராத் அணி தொடர்ந்து 2 வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதன் மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் அறிமுகமான முதல் 2 தொடர்களில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் அணி என்ற பெருமையை அந்த அணி பெற்றது.
இந்த நிலையில், 16 வது ஐ.பி.எல் தொடரை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வெல்லப் போவது யார் என்பதை நிர்ணயிக்கும் பிரம்மாண்ட இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.
எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லீக் சுற்றில் மும்பை, டெல்லி அணிகளுடன் தலா 2 வெற்றி பெங்களூரு, லக்னோ, கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகளுடன் தலா 1 வெற்றியும் ஒரு ஆட்டத்தில் முடிவில்லை என்ற கணக்கில் 17 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 2 வது இடத்தை பிடித்தது.
ப்ளே-ஆப் சுற்றில் சென்னையில் நடைபெற்ற முதலாவது தகுதி சுற்று போட்டியில் குஜராத் அணியை முதன்முறையாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அந்த அணியின் பேட்டிங் வரிசையில் தொடக்க ஆட்டக்காரர்கள் டெவன் கான்வே 625, ருதுராஜ் கெய்க்வாட் 564 ரன்களுடனும் மிடில் வரிசையில் ஷிவம் துபே, ரஹானே ஆகியோர் வலுசேர்க்கின்றனர். பந்து வீச்சில் துஷார் தேஷ்பாண்டே 21), ரவீந்திர ஜடேஜா 19, மகிஷா பதிரானா, தீபக் சஹர், மகேஷ் தீக்ஷனா பலம் சேர்க்கின்றனர்.
நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் லீக் சுற்றில் ஆதிக்கம் செலுத்தியதுடன் 20 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்தது. இதனை தொடர்ந்து நடைபெற்ற முதலாவது தகுதி சுற்றில் 15 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் தோல்வியை தழுவியது. இதன் பின்னர் நடந்த 2 வது தகுதி சுற்று போட்டியில் மீண்டும் அபாரமாக செயல்பட்டு மும்பை அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
குஜராத் அணியின் பேட்டிங் வரிசையில், அதன் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 3 சதம் 5 அரைசதங்களுடன் 851 ரன்கள் குவித்து நடப்பு தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ஹர்திக் பாண்டியா 325, விருத்திமான் சஹா 317, விஜய் சங்கர் 301 ரன்களுடன் முதுகெலும்பாக திகழ்கின்றனர். பந்துவீச்சை பொறுத்தவரை முகமது ஷமி 28, ரஷித் கான் 27, மொகித் ஷர்மா 24 விக்கெட்டுகளுடன் எதிரணியை அச்சுறுத்துகின்றனர்.
இவ்விரு அணிகளும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதியதில் குஜராத் 3, சென்னை 1 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. தொடர்ந்து 2 வது முறையாக கோப்பையை வெல்ல குஜராத் அணியும், 5 வது முறையாக கோப்பையை வென்று சாதனை பட்டியலில் இணைய சென்னை அணியும் மல்லுக்கட்டும் என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.