முதல் அணியாக வெளியேறிய டெல்லி..!! அடுத்த சுற்றை உறுதி செய்ததா சி.எஸ்.கே..?!!



Chennai won the 55th league match against Delhi Capitals by 27 runs.

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான 55 வது லீக் போட்டியில் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 54 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நேற்று இரவு சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற 55 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செயவதாக அறிவித்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட்-டெவன் கான்வே ஜோடி இன்னிங்ஸை தொடங்கியது. மெதுவான தன்மை கொண்ட ஆடுகளத்தில் அதிரடியாக விளையாட முடியாத நிலையில், கெய்க்வாட் 10, கான்வே 24 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

பின்னர் வந்த ரஹானே ஓரளவு அதிரடி காட்ட, மொயின் அலி 7 ரன்களில் வெளியேறினார். அம்பத்தி ராயுடுவுடன் கைகோர்த்த ரஹானே 21 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஷிவம் துபே சிக்ஸர்கள் விளாசுவதில் ஆர்வம் காட்டினார். 3 சிக்ஸர்களை விளாசிய துபே 25 ரன்களுடனும், அம்பத்தி ராயுடு 23 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.

இதன் பின்னர் ரவீந்திர ஜடேஜாவுடன் இணைந்த கேப்டன் தோனி அதிரடியாக பேட்டை சுழற்றினார். 9 பந்துகளை சந்தித்த தோனி 20 ரன்களுடன் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். ஜடேஜா 21 ரன்களுடன் ஆட்டமிழந்தார். 20 ஓவர்களின் முடிவில் சென்னை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் குவித்தது. டெல்லி அணி தரப்பில் மிட்செல் மார்ஷ் 3, அக்ஸர் படேல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனை தொடர்ந்து 168 ரன்கள் இலக்கை விரட்டிய டெல்லி அணிக்கு டேவிட் வார்னர்-பில் சால்ட் ஜோடி தொடக்கம் அளித்தது. டேவிட் வார்னர் டக்-அவுட் ஆகி வெளியேற, பில் சால்ட் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய மிட்செல் மார்ஷ் 6 ரன்களுக்கு வெளியேற, பின்னர் கைகோர்த்த மனிஷ் பாண்டே-ரூசோவ் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்க போராடியது.

இவர்களில் மனிஷ் பாண்டே 27 ரன்களுடன் வெளியேற, ரூசோவ் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின் வரிசையில் அதிரடிகாட்டிய அக்ஸர் படேல் 21, லலித் யாதவ் 12 ரன்களுடன் வெளியேறினர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி அணி 8 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் புள்ளி பட்டியலில் 2 ஆம் இடத்தை தக்கவைத்தது.

இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி ஏறத்தாழ பிளே-ஆப் சுற்றை உறுதி செய்துள்ளது. 11 போட்டிகளில் பங்கேற்று 7 தோல்விகளை சந்தித்த டெல்லி கேப்பிடல்ஸ் முதல் அணியாக வெளியேறியது.