மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முதல் வெற்றியை ருசித்த சென்னை..!! 5 ஆயிரம் ரன்களை கடந்து தோனி சாதனை..!!
லக்னோ அணிக்கு எதிரான 6 வது லீக் போட்டியில் சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடந்த 2008 ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 6 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நேற்று நடந்த 6 வது போட்டியில் சி.எஸ்.கே-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை தொடர்ந்து, களமிறங்கிய சென்னை அணிக்கு டெவன் கான்வே-ருதுராஜ் கெய்க்வாட் தொடக்கம் அளித்தனர். அதிரடியாக தொடங்கிய இந்த ஜோடி பந்துகளை பவுண்டரியை நோக்கி விரட்டிக் கொண்டே இருந்தது. ருதுராஜ் 31 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 57 ரன்களும் டெவன் கான்வே தனது பங்குக்கு 47 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த சிவம் துபே 27 ரன்களும், மொயீன் அலி 19 ரன்களும் எடுத்தனர். பென் ஸ்டோக்ஸ் 8 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அம்பத்தி ராயுடுவின் அதிரடியால் சென்னை அணி 200 ரன்களை கடந்து சாதனை படைத்தது. ஐ.பி.எல் போட்டிகளில் இதுவரை 24 முறை 200 ரன்களுக்கு மேல் குவித்த முதல் அணி சென்னை என்பது குறிப்பிடத்தக்கது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 7 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் குவித்தது.
இதனை தொடர்ந்து, 218 ரன்கள் இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுல்-கெய்ல் மேயர்ஸ் தொடக்கம் அளித்தனர். தொடங்கியதில் இருந்தே அதிரடி காட்டிய இந்த ஜோடியில் கெய்ல் மேயர்ஸ் 22 பந்துகளில் அரைசதம் கடந்த நிலையில் 53 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து கே.எல். ராகுல் 20 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின்னர் களமிறங்கிய குருணால் பாண்டியா 9 ரன்னும், மார்க் ஸ்டோய்னிஸ் 21 ரன்களும் எடுத்து வெளியேறினர். மறுமுனையில் அதிரடி காட்டிய நிகோலஸ் பூரன் 32 (18) ரன்களில் ஆட்டமிழந்தார். பதோனி 23 (18) ரன்களில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் கிருஷ்ணப்பா கவுதம் 17 (11) ரன்களுடனும், மார்க் வுட் 10 (3) ரன்களுடனும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்த லக்னோ அணி 12 ரங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. சென்னை அணி தரப்பில் அதிகபட்சமாக மொயின் அலி 4 விக்கெட்டுகளும், தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளும், மிட்செல் சாண்ட்னர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த போட்டியில் 12 ரன்கள் எடுத்த எம்.எஸ்.தோனி ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 5 ஆயிரம் ரன்களை கடந்தார். அவர் 236 போட்டிகளில் பங்கேற்று 24 அரைசதம் உள்பட 5004 ரன்கள் குவித்துள்ளார். இந்த மைல்கல்லை கடந்த 7 வது வீரர் தோனி ஆவார்.