திக்.. திக்.. திக்.. கடைசி ஓவர்..!! இஷாந்த் சர்மாவின் மாயாஜாலம் கொடுத்த திரில் வெற்றி..!!



delhi-team-won-by-5-wickets-in-thrilling-match-against

குஜராத் அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் டெல்லி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 43 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நேற்று இரவு ஆமதாபாத்தில் நடைபெற்ற 44 வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து ஃபில் சால்ட்-டேவிட் வார்னர் ஜோடி டெல்லி அணியின் இன்னிங்ஸை தொடங்கியது. முகமது ஷமி வீசிய முதல் பந்தில் ஃபில் சால்ட் கோல்டன் டக் ஆகி வெளியேறினார். இதனை தொடர்ந்து டேவிட் வார்னர் 2, ரீலி ரோசவ் 8, மனிஷ் பாண்டே 1, பிரியம் கார்க் 10 அடுத்தடுத்து ஆட்டமிழந்து நெருக்கடி ஏற்படுத்தினர்.

ஒரு கட்டத்தில் டெல்லி அணி 23 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், களமிறங்கிய அக்ஸர் படேல் பொறுப்புடன் விளையாடி 27 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் இளம் வீரர் அமன் கான் 3 பவுண்டரி 3 சிக்சருடன் 51 (43) ரன்கள் குவித்து கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார். டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் சேர்த்தது. குஜராத் சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 4 விக்கெட்டுகளும் மோகித் சர்மா 2 விக்கெட்களும் எடுத்தனர்.

இதனை தொடர்ந்து 131 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத்துக்கு, தொடக்கம் அளித்த விருத்திமான் சஹா, கலீல் அஹமத் வீசிய முதல் ஓவரில் டக் அவுட் ஆனார். மறுமுனையில் தடுமாறிய சுப்மன் கில் 6 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த விஜய் சங்கர் 6, டேவிட் மில்லர் 0 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதன் பின்னர் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும், அபினவ் மனோகரும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர். மனோகர் 26 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் நிதானமாக ஆடிய ஹர்திக் பாண்டியா அரைசதம் அடித்தார். இதன் காரணமாக கடைசி 2 ஓவர்களில் குஜராத்தின் வெற்றிக்கு 33 ரன்கள் தேவைப்பட்டது.

அன்டிரிச் நோர்கியா வீசிய 19 வது ஓவரில் முதல் 3 பந்துகளில் 3 ரன் எடுத்த நிலையில் அடுத்த 3 பந்துகளில் ராகுல் திவேதியா பிரமாண்டமான சிக்சர்களை பறக்கவிட்டு ரசிகர்களை பரவசப்படுத்தினார். கடைசி ஓவரில் 12 ரன்கள் எடுக்க வேண்டிய , பரபரப்பான கடைசி ஓவரை இஷாந் சர்மா வீசினார்.

துல்லியமாக பந்து வீசிய இஷாந்த் ஷர்மா, ராகுல் திவேதியாவை 20 ரன்களில் வீழ்த்தியதுடன்6 ரன் மட்டுமே வழங்கி டெல்லி அணிக்கு திரில் வெற்றியை பெற்றுதந்தார். குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 125 ரன்களுடன் முடங்கியது. இதன் மூலம் டெல்லி அணி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.