தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
முதலாவது T20 போட்டி: தடுமாறிய இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!
இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிராக 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது ஆட்டம் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி சார்பில் கலீல் அஹ்மது மற்றும் க்ருனால் பண்டியா சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகம் ஆகினர்.
முதலில் பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தினேஷ் ராம்தின், ஷாய் ஹோப் துவக்க வீரர்களாக களம் இறங்கினர். வெஸ்ட் இண்டீஸ் அணி துவக்கம் முதல் விக்கெட் இழப்பால் தவித்தது. அறிமுக வீரர் ஆலென் 27 ரன்கள் எடுத்தது மட்டுமே அந்த அணியின் தனிநபர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும். மற்ற வீரர்கள் ஒருவர் கூட 20 ரன்களை தொடவில்லை.
20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட்கள் இழந்து 109 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 3, உமேஷ், கலீல், பும்ரா, க்ருனால் பண்டியா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. முதல் ஓவரிலேயே ரோஹித் சர்மா 6 ரங்களிலும் மூன்றாவது ஓவரில் ஷிகர் தவான் 3 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த லோகேஷ் ராகுல் சிறிது நேரம் நிலைத்து ஆடினார். ஆனால் ரிசப் பண்ட் 6 ஆவது ஓவரில் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் அவுட்டாகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து எட்டாவது ஓவரில் லோகேஷ் ராகுல் வெளியேற இந்திய அணி 45 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.
பின்னர் களமிறங்கிய மனிஷ் பாண்டே மற்றும் தினேஷ் கார்த்திக் பொறுமையாக ஆடினர். 15-வது ஓவரில் மனிஷ் பாண்டே 19 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து வந்த குருணல் பாண்டியா அதிரடியாக ஆட இந்திய அணி 17.5 ஓவர்களில் வெற்றி இலக்கான 110 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
3 விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.