கொரோனா வைரஸ் அச்சம்; துபாய் பயணத்தை ரத்து செய்த பிசிசிஐ தலைவர் கங்குலி
உலகையே அச்சுறுத்தும் இந்த கொரோனா வைரஸால் தொழில் ரீதியான பல ஆலோசனை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இதனால் பல நிறுவனங்களின் முன்னேற்றம் தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து ஆலோசிப்பதற்காக ஆசிய கிரிக்கெட் கவுண்சில் கூட்டம் நாளை மறுநாள் துபாயில் நடைபெறுவதாக இருந்தது. இதற்கு இந்தியாவின் சார்பில் பிசிசிஐ தலைவர் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா கலந்துகொள்வதாக இருந்தது.
இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இருவரும் இன்று துபாய் செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் துபாயிலும் கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளது என்ற செய்தி பரவியதையடுத்து தற்போது இந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடரை பாக்கிஸ்தான் நடத்தவுள்ளது. ஆனால் இந்திய அணி பாதுகாப்பு கருதி பாக்கிஸ்தானிற்கு செல்ல முடியாத காரணத்தால் ஆசிய கோப்பை தொடர் துபாயில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.