2020ம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகள் எங்கு நடைபெறும்? கங்குலி திட்டவட்டம்!
உலகத்தையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.
ஐபிஎல் தொடர் ஆரம்பத்தில் மார்ச் 29 ஆம் தேதி விளையாட திட்டமிடப்பட்டது, ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலின் எண்ணிக்கை அதிகரிப்பதால், ஐபிஎல் தொடர் வெளிநாடுகளில் நடத்தப்படும் என்ற செய்திகள் வந்துள்ளன. சூழ்நிலை எப்படி இருந்தாலும் இந்தியாவில் போட்டிகளை நடத்துவதே தங்களின் முதல் முன்னுரிமை என்று பி.சி.சி.ஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை போன்றவை ஐபிஎல் போட்டியில் பெரிய அணிகளாக உள்ளன. ஆனால் இப்போது இந்த நகரங்களில் ஐபிஎல் போட்டியை நடத்த முடியுமா என்று தெரியவில்லை. வெளிநாட்டில் ஐபிஎல் போட்டி நடைபெற்றால் பிசிசிஐக்கும் அணிகளுக்கும் அதிக செலவை ஏற்படுத்தும். இதனால் நிலைமையை கூர்ந்து கவனித்து அதற்கேற்ற முடிவுகளை எடுக்கவிருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.