உலக கோப்பை டி-20 தொடர்: அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்குமா இந்தியா!.. பங்களாதேஷ் அணியுடன் இன்று மோதல்..!



India clash with Bangladesh team today

எட்டாவது டி-20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.  டி-20 உலகக்கோப்பையில் சூப்பர் 12 சுற்று ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் திரில் வெற்றியை சுவைத்தது.

தனது 2 வது போட்டியில் 56 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்திய இந்திய அணி, அடுத்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் குறைவான அளவில் இலக்கை நிர்ணயித்த போதிலும் கடுமையாக போராடிய இந்திய அணி கடைசி ஓவர் வரை தென்னாப்பிரிக்க அணிக்கு சவால் அளித்தது.

இந்த நிலையில், இந்திய அணி தனது 4 வது போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொள்கிறது. கடந்த போட்டியில் தோல்வியுற்ற இந்திய அணி இந்த போட்டியில் சற்று நெருக்கடியுடனே களம் இறங்குகிறது. அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள கட்டாயம் இந்த போட்டியில் வென்றே தீரவேண்டும் என்ற மனநிலையில் இந்திய வீரர்கள் உள்ளனர்.

இந்திய அணியை பொறுத்தவரை டாப் 4 வீரர்களில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இந்த தொடரில் அரைசதம் விளாசியுள்ளனர். ஆனால் கே.எல்.ராகுல் 3 போட்டிகளிலும் சேர்த்து 22 ரன்கள் மட்டும் எடுத்து தடுமாறிக் கொண்டிருக்கிறார். அவர் இந்த போட்டியில் பார்முக்கு திரும்ப வேண்டியது அவசியமாகும்.

சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 11 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 10 போட்டிகளில் இந்திய அணியும், 1 போட்டியில் பங்களாதேஷ் அணியும் வெற்றி பெற்றுள்ளன. அடிலெய்டு மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டிய்ல் மழை குறுக்கிட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இன்றைய வானிலையை பொறுத்தவரை, மழை பெய்வதற்கு 60 சதவீதம் வாய்ப்புள்ளதாகவும், நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அங்குள்ள வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.