நான் 50 ரன் அடிச்ச உடனே கோலி என்கிட்ட வந்து ஒரு விஷயம் சொன்னாரு.. யோசிக்காம நான் அத செஞ்சுட்டேன்.. இஷான் கிஷான் கூறிய சுவாரசிய தகவல்..



Ishan Kishan interview with Sahal after his first T20 match

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய நேற்றைய இரண்டாவது T20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

5 போட்டிகள் கொண்ட இந்த T20 தொடரில் முதல் T20 போட்டியில் இங்கிலாந்து அணியும், இரண்டாவது T20 போட்டியில் இந்திய அணியும் வெற்றிபெற்று சம நிலையில் உள்ளது. நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து, 164 ரன்கள் எடுத்தது. 165 என்ற இலக்குடன் தொடர்ந்து ஆடிய இந்திய அணி, 18 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டி வெற்றிபெற்றது.

நேற்றைய போட்டியில் இந்திய அணி வீரர்கள் இஷான் கிஷான் மற்றும் விராட்கோலியின் சிறப்பான ஆட்டம் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக தனது அறிமுக போட்டியிலேயே எந்தவித பதட்டமும் இன்றி ஆடி, அரைசதம் அடித்தார் இஷான் கிஷான். இஷானின் இந்த சிறப்பான ஆட்டத்திற்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்த பிறகு, இஷான் கிஷான் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹலுடன் தனது அறிமுக போட்டி குறித்து உரையாடினார். அப்போது, நான் 50 ரன்கள் எடுத்துவிட்டேனா என்பதே தெரியாமல்தான் விளையாடிக்கொண்டிருந்தேன். அப்போது என்னிடம் பேசிய கோலி, 'சிறந்த இன்னிங்ஸ்' என பாராட்டிய போது தான் நான் அரை சதமடித்ததை உணர்ந்தேன்.

பொதுவாக நான் அரைசதம் அடித்தால் பேட்டை உயர்த்தி காட்ட மாட்டேன். எப்போதாவதுதான் அப்படி செய்வான். ஆனால் நேற்றைய போட்டியில் நான் அரைசதம் அடித்ததும், கேப்டன் விராட்கோலி என்னிடம் வந்து, உனது பேட்டை உயர்த்தி மைதானம் முழுவதையும் சுற்றிக் காட்டு. இது உனது முதல் அரை சதம் என கூறினார்.

கோலி அப்படி சொன்னதும், அவர் சொன்னதை ஒரு கட்டளைபோல் எடுத்துக்கொண்டு உடனடியாக நான் பேட்டை உயர்த்திக் காட்டினேன் என இஷான் கிஷன், சாஹலிடம் தெரிவித்தார்.