பரபரப்பான கட்டத்தில் மோதும் கொல்கத்தா-ராஜஸ்தான்..!! அடுத்த சுற்று வாய்ப்பு யாருக்கு..?!!



Kolkata Knight Riders-Rajasthan Royals will face each other in the 56th league match in Kolkata today.

இன்று கொல்கத்தாவில் நடைபெறும்  56 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 55 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இன்று இரவு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும்  56 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதுவரை 11 போட்டிகளில் பங்கேற்றுள்ள கொல்கத்தா அணி 5 வெற்றி, 6 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று புள்ளிபட்டியலில் 6 வது இடத்தை பிடித்துள்ளது. தனது முந்தைய 2 ஆட்டங்களில் ஐதராபாத், பஞ்சாப் அணிகளுடனான வெற்றிக்கு பிறகு இன்று ராஜஸ்தான் அணியை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா அணியின் பேட்டிங் வரிசையில் ரிங்கு சிங் 337, நிதிஷ் ராணா 326, வெங்கடேஷ் அய்யர் 314, உள்ளிட்டோர் வலுசேர்க்கின்றனர். பந்து வீச்சை பொறுத்தவரை வருண் சக்ரவர்த்தி, சுயாஷ் ஷர்மா, சுனில் நரின், ஹர்ஷித் ராணா ஆகியோர் வலுசேர்க்கின்றனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பொறுத்தவரை  11 போட்டிகளில் பங்கேற்று  5 வெற்றி, 6 தோல்விகளுடன்  10 புள்ளிகள் பெற்று 5 வது இடத்தை  பிடித்துள்ளது. தனது முதல் 5 போட்டிகளில்  4 ல் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி, அடுத்த 6 போட்டிகளில்  5 ல் தோல்வியடைந்து பின்னடைவை சந்தித்துள்ளது.

ராஜஸ்தான் அணியின் பேட்டிங் வரிசையில் ஜெய்ஸ்வால் 477, ஜோஸ் பட்லர் 392, சஞ்சு சாம்சன், சிம்ரன் ஹெட்மயர் உள்ளிட்டோர் வலுசேர்க்கின்றனர். பந்து வீச்சில் யுவேந்திர சாஹல்  17, ஆர்.அஸ்வின் 14, டிரென்ட் பவுல்ட், சந்தீப் ஷர்மா, ஆடம் ஜம்பா உள்ளிட்ட பந்துவீச்சாளர்கள் நல்ல நிலையில் உள்ளனர்.

இவ்விரு அணிகள் இதுவரை நேருக்கு நேர் 26 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியதில் கொல்கத்தா 14, ராஜஸ்தான் 12 முறை வெற்றியடைந்துள்ளன. இரு அணிகளும் 10 புள்ளிகள் பெற்றுள்ளதால் அடுத்த சுற்றுக்கு முன்னேற இன்றைய போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.